02.02.2009.
2002 ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் சுமார் 7 ஆயிரம் சிறுவர்கள் ஆயுதக்குழுக்களால் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று அச்சிறுவர்களின் உறவினர்கள் யுனிசெப் அமைப்பிடம் முறையிட்டுள்ளனர்.
இவர்களில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து 550 சிறுவர்களை ஆயுதக்குழுக்கள் சேர்த்துள்ளதாக யுனிசெப்புக்கு முறையிடப்பட்டுள்ளது. என்று யுனிசெப் அமைப்பின் திருகோணமலை மாவட்ட தலைமைப்பிரதிநிதி ஜொய்ஸ் காச்சிரி “சிறுவர்களை மீட்போம்’ என்ற தலைப்பிலான இயக்கத்தினை அங்குரார்ப்பணம்செய்யும் நிகழ்வில் பங்குபற்றிப் பேசும்போது தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரி.ரி.ரஞ்சித் டி சில்வா நிகழ்விற்கு தலைமை வகித்தார்.மாவட்டச்செயலகத்தில் கடந்த வியாழக்கிழமை மாலை இந்நிகழ்வு இடம்பெற்றது.
ஆயுதக் குழுக்கள் சிறுவர்களை சேர்த்துக் கொள்வதை இப்பிரசார இயக்கம் முடிவுக்குக் கொண்டு வரும் என்று நம்புகின்றோம். மிக விரைவில் கடைசிச் சிறுவர் போராளி விடுவிக்கப்படுவதை நாம் பார்க்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது;
இன்றைய நிலையில் ஆயுதக்குழுக்கள் சிறுவர் போராளிகளை சேர்ப்பதை முற்றாக நிறுத்துவதற்கான தனித்துவமான வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்துள்ளது. அவ்வாறு சேர்க்கப்பட்ட சிறுவர் போராளிகளை விடுவிப்பதை உறுதி செய்வதும் விடுவிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கும் இலங்கைக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இன்று ஆரம்பிக்கப்படும் இயக்கம் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
விடுவிக்கப்பட்ட சிறுவர் போராளிகளை கிரிமினல்களாக பார்க்கக் கூடாது. அவர்களை பாதிப்புக்குள்ளானவர்களாகக் கருதி அவர்களுக்கு 2 ஆவது குழந்தைப் பருவத்தை அனுபவிக்கும் வாய்ப்பு வழங்கப்படவேண்டும். சிறுவர் போராளி அனுபவத்திலிருந்து மீண்டு வரும் சிறுவர்கள் அசாதாதரண மீளும் தன்மை பொருந்தியவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்களை சமூகத்தில் மீண்டும் வெற்றிகரமாக ஒன்றுபடுத்தமுடியும் என்றும் யுனிசெப் திருகோணமலை தலைமைப்பிரதிநிதி ஜொய்ஸ் காச்சிரி தெரிவித்தார்.
“எம்மைப்பெற்றோருடன் வாழவிடுங்கள்’ என்ற தலைப்பில் சிறார்கள் நடித்த நாடகமும் நிகழ்வில் இடம்பெற்றது.