இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி, பாராளுமன்றம் அருகில் நாளை 2 ஆயிரம் பேருடன் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ உண்ணாவிரதம் இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் இருதரப்பும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், மருத்துவமனைகள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தக் கூடாது என்று, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபேண்டும் கூட்டு அறிக்கை விடுத்தனர்.
ஆனால், அதன் பின்னரும் புதுக்குடியிருப்பு, சுதந்தரபுரம் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் மீது சிங்கள ராணுவமும், விமானப் படையும் ஏவுகணைத் தாக்குதலும், குண்டுவீச்சும் நடத்தியதில், மருத்துவமனையில் இருந்த 116 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 260 பேர் படுகாயமுற்று உள்ளனர். கடந்த 10ஆம் தேதி மட்டும் இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் 28 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
ஆனால், உலகநாடுகளின் கண்டனத்துக்கும், வெறுப்புக்கும் இலங்கை அரசு ஆளாகி வருவதால், அதைத் திசைதிருப்புவதற்காக, விடுதலைப்புலிகள்தான் அப்பாவித் தமிழர்களைக் கொன்றார்கள் என்று கோயபல்ஸ் பாணி பொய் பிரச்சாரத்தை இரண்டு நாள்களாக இலங்கை அரசு செய்து வருகிறது.
இலங்கை அரசின் அராஜகத்தை, வெளி உலகத்துக்குத் தெரிவித்ததற்காக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அலுவலர்கள், பணியாளர்கள் 300 பேரை, முல்லைத் தீவில் இருந்தே வெளியேற்றிவிட்டது. நிலைமை இவ்வாறு இருக்கையில், இலங்கை அரசு ஈழத் தமிழர்களை இப்படிக் கொன்று குவிக்கும் சிங்கள அரசின் ராணுவத் தாக்குதலை நிறுத்துவதற்கு, போர் நிறுத்தம்தான் ஒரே வழி என்பதை நன்றாக அறிந்திருந்தும், இந்திய அரசு போரை நிறுத்தச் சொல்லத் தயாராக இல்லை. ஏனெனில், விடுதலைப் புலிகளை அழிப்பதுதான் இந்திய அரசின் நோக்கம்.
எனவே, இந்திய அரசின் துரோகத்துக்குக் கண்டனம் தெரிவிக்கவும், வதைபடும் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க, அகில இந்திய அளவில், ஆதரவு திரட்டவும், உண்மை நிலைமையை இருட்டடிப்புச் செய்யும் டெல்லி ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரத்தைக் கடந்து, இந்திய மக்களுக்கு உண்மையைத் தெரிவிக்கவும், தலைநகர் டெல்லியில் இந்திய நாடாளுமன்றத்துக்கு அருகில் ஜந்தர் மந்தரில் 13ஆம் தேதி (நாளை), மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில், என்னுடைய தலைமையில், மிகப்பெரிய உண்ணாநிலை அறப்போர், காலை எட்டு மணி முதல் நடைபெறுகிறது.
இந்த அறப்போரில் பங்கேற்பதற்காக, ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்கள். பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த உண்ணாநிலை அறப்போருக்கு ஆதரவு தெரிவித்து, ஈழத்தமிழர்களை காக்க உரை ஆற்றுவார்கள் என்று வைகோ கூறியுள்ளார்.