விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி கட்சி, முள்ளிவாய்க்கால் நினைவு கூறலை விமர்சிக்கிறது. இதன்மூலம் புலிகளை நினைவுகூற முயற்சி நடப்பதாக கூறுகிறது. எனவே இந்த நினைவு கூறலை நடத்துவோரை கைது செய்ய வேண்டும் என கூறுகிறது.
வடக்கில் இறுதி போர்முனையாக இருந்த முள்ளிவாய்க்காலை நினைவு கூறுபவர்கள் தாங்கள் புலிகளை நினைவு கூறப்போவதாக இதுவரையில் சொல்லவில்லை. அந்த போர்முனையில் புலிகள் இயக்கத்தை சார்ந்தவர்கள் மட்டும் அல்ல, சாதாரண பொது மக்களும் பெருந்தொகையில் கொல்லப்பட்டார்கள்.
இறந்துபோன அனைவரையும் நினைவுகூறும் உரிமை அவர்களது குடும்ப உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், வடக்கின் மக்கள் பிரதிநிதிகளுக்கும் உண்டு. அதை எவரும் தட்டி பறிக்க முடியாது. இது சம்பந்தப்பட்டவர்களின் அடிப்படை மனித உரிமையாகும். இந்த உரிமை வழங்கப்படவேண்டும் என இந்த அரசாங்கத்தின், கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு சமர்பித்துள்ள சிபாரிசுகளிலேயே கூறப்பட்டுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மனோ மேலும் கூறியதாவது,
இந்த அரசாங்க தலைமை இந்த நாட்டு பிரச்சினையை ஜெனீவாவுக்கு கொண்டு சென்று ஒரு முன்மாதிரியை 1989ல் காட்டியது. அதுபோல் அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கும் முன்மாதிரியும் தெற்கில் இருந்துதான் முழு நாட்டுக்கும் முதன்முதலில் கிடைத்தது. ஆயுத கிளர்ச்சியாளர்களை நினைவு கூறும் நிகழ்வுகளையும் தெற்கில் தான் நடத்தப்பட்டு, முழுநாட்டுக்கும் முன்மாதிரி காட்டப்பட்டது.
ஆனால் இவை அனைத்தும் தெற்கில் நடக்கும் போது இணக்கப்பாட்டை தெரிவிப்பவர்கள், அவை வடக்கில் நடைபெறும் போது மாத்திரம் கடுமையாக விமர்சனம் செய்து, எச்சரிக்கை விடுத்து, பல்கலைக்கழகங்களை மூடிவிடும் அளவுக்கு போகின்றார்கள். இது இந்த நாட்டில் இரண்டு வித நியாயங்கள நடைமுறையில் இருப்பதை காட்டுகின்றன.
மாண்டுபோன தமிழீழ விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்களையும் நினைவு கூற அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் முழுமையான உரிமை உண்டு. தெற்கிலே அரசாங்கத்தை எதிர்த்து ஆயுதம் தூக்கிய தேசபிரேமி கிளர்ச்சியாளர்களின் வரலாற்றை கடந்துதான் ஜேவிபி, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி ஆகியவை பகிரங்க அரசியலுக்கு வந்துள்ளன. அந்த கிளர்ச்சியாளர்களை நினைவுகூறும் அரசியல் நிகழ்வுகளை இந்த கட்சிகள் இப்போதும் தெற்கில் நடத்துகின்றன.
இதன்மூலம் ஆட்சியை பிடிக்க ஆயுதம் தூக்கும் கொள்கையை ஜேவிபி, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி என்பவை ஏற்கின்றன என புரிந்து கொள்ள முடியுமா? அவ்வாறே வடக்கில் கொல்லப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்களை நினைவுகூறும் உரிமை வடக்கின் மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்கின்றது. இது அவர்கள் ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்கின்றார்கள் என்று அர்த்தப்படாது.
Honouable Mano Ganeshan we have to wait some more for Honouable Wimal Weerawansa to talk about that in Wanni.