1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் நாள் அதிகாலை தமிழர்கள் மனங்களில் நெருப்பெரிந்தது. ஆயிரமாயிரமாக முள்ளிவாய்க்காலில் மக்களை எரித்துச் சாம்ப்லாக்கிய அதே சிங்கள பௌத்த பேரினவாதக் கும்பல் நூல்களை எரித்து தம்மை அடையாளம் காட்டியது.
பிரிந்து செல்லும் உரிமைக்காகத் தமிழ்ப் பேசும் மக்கள் போராட வேண்டும் என்பதை அவர்களுக்கு உணர்த்தியது.
சிங்கள பௌத்த பேரினவாதிகளால் யாழ் பொது நூலகம் நூல்களோடு எரித்துச் சாம்பலாக்கப்பட்ட நினைவு நாள் இன்று. ஜூன் முதலாம் திகதி நள்ளிரவு கடந்த வேளையில் இலங்கை யூ,என்.பி அரச அமைச்சர் காமினி திசானாயக்க தலைமையிலான காடையர் கும்பல் ஒன்று அரச படைகளின் துணையுடன் நூலகத்திற்குத் தீ மூட்டியது. தேசிய இன முரண்பாட்டைத் கூர்மைப்படுத்தி அதனூடாக சிங்கள பௌத்த இனவாதத்தைத் தூண்டி தேர்தலில் வாக்குப் பொறுக்கும் நோக்குடனேயே யாழ்ப்பாண நூலகம் சிங்கள பௌத்த பேரினவாதிகளால் 1981 ஆம் ஆண்டு ஜுன் மாதம் அதிகாலையில் தீக்கு இரையாக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பொது நூலகம் 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது.
யாழ் நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு,
மிக விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது.யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன நூலகத்தின் முதலாவது கட்டடம் 1959 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.