மாற்று கருத்தாடலுக்கான அமையத்தின் ஏற்பாட்டில் கடந்த 04.04.2015 அன்று அரசியலமைப்புக்கான 19வது சீர்திருத்தம் மற்றும் தேர்தல்முறை மறுசீரமைப்பு தொடர்பான கருத்தரங்கும் கலந்துரையாடலும் வெள்ளவத்தையில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிலையத்தில் இடம்பெற்றது. எஸ். சரவணபவானந்தன், எஸ். கோகுலன், இ.தம்பையா ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் எஸ். விஜயகுமார் ‘அரசியல் யாப்பிற்கான 19வது திருத்தமும் இலங்கை மக்களின் ஜனநாயக வாழ்வும்’ என்ற தலைப்பிலும் பேராதனை பல்கலைக்கழக அரசறிவியல் துறை விரிவுரையாளர் என். சிவகுமார் ‘அனைத்து இலங்கை மக்களினதும் பங்கேற்பு அரசியலுக்கான தேர்தல் மறுசீரமைப்பு’ என்ற தலைப்பிலும் விரிவுரைகளை நிகழ்த்தினர்.
அமையத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் எஸ். சரவணபவானந்தன் தனது தலைமையுரையில் மாற்று கருத்தாடலுக்கான அமையம் எந்த வகையிலும் ஒரு அரச சாரா நிறுவனம் அல்ல. இது ஒரு வெகுஜன அமைப்பு என்பதை வலியுறுத்தியதுடன் இது மக்களுக்கான மாற்றுக் கருத்துக்களை முன்வைத்து அவர்களை அணிதிட்டுவதனை நோக்காக கொண்டது. அந்த அடிப்படையிலேயே இக் கருத்தரங்கும் கலந்துரையாடலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
‘அரசியல் யாப்பிற்கான 19வது திருத்தமும் இலங்கை மக்களின் ஜனநாயக வாழ்வும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய சு. விஜயகுமார், 19வது திருத்தத்தில் சில ஜனநாயக அம்சங்கள் இருக்கின்ற போதும் அதில் இலங்கையில் நிலவும் நவதாராள பொருளாதாரத்தை மேலும் முறைமைப்படுத்தி மேற்கொள்வதற்கான நிறுவன கட்டமைப்புகளை தாபிப்பதற்கான நோக்கமே முதன்மையானது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் அதிகார எல்லைகள் தொடர்பில் முரண்பாடுகளை இத்திருத்தம் கொண்டிருக்கின்றது. அது தீர்க்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால் புதிய முறையில் நவதாராள பொருளாதார முறை தொடரும். மக்களின் ஜனநாயக போராட்டங்களின் விளைவாக ஆட்சியாளர்கள் 19வது திருத்தத்திற்கு தள்ளப்பட்ட போதும் அது மக்களின் ஜனநாயக உரிமையை வாழ்வை முழுமையாக உறுதிப்படுத்த முடியாதுள்ளது. ஏனெனில் நவதாராள பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்தும் அரசு அடக்கு முறை நோக்கங்களுக்காக அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டியுள்ளது. மக்கள் ஜனநாய கூறுகளுக்கு ஆட்சியாளர்களுக்கு விருப்பம் இல்லை என்பது 19வது திருத்தம் மக்களுடன் எவ்வித கலந்துரையாடலும் இன்றி கொண்டு வந்த முறையில் இருந்து தெரியவருகிறது. ஜனநாயகத்திற்கும் நவதாராள பொருளாதாரத்திற்கும் இடையில் முரண்பாடே இதற்கு காரணம் என்றார்.
என். சிவகுமார் ‘அனைத்து இலங்கை மக்களினதும் பங்கேற்பு அரசியலுக்கான தேர்தல் மறுசீரமைப்பு’ என்ற தனதுரையில் தேர்தல் முறை அனைத்து மக்களின் பிரதிநிதித்துவத்தையும் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உறுதி செய்வதாக இருப்பதே ஜனநாயகத்திற்கு ஏற்புடையது. எனினும் 20வது திருத்தம் ஊடாக கொண்டுவரப்பட இருப்பதாக சொல்லப்படும் கலப்பு தேர்தல் முறை விரிவாக ஆராயப்படாமல் நிறைவேற்றப்படுமாயின் அது சிறுபான்மை கட்சிகளுக்கும் சிறிய கட்சிகளுக்கும் பாதகமாக அமைவதுடன் அது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இன்மையையும் தோற்றுவிக்கும். ‘தினேஸ்குணவர்தன பாராளுமன்ற தொரிவு குழு’வின் முன்மொழிவுகள் தேர்தல் ஆணையாளரின் முன்மொழிவுகள் இன்று ஆராயப்பட்டு வருகின்றன. கலப்பு முறையில் எத்தனை உறுப்பினர்கள் எளிய பெரும்பான்மை முறையில் தெரிவு செய்யப்பட வேண்டும் விகிதாசார முறையில் எத்தனை பேர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பவற்றில் உடன்பாடுகள் இன்னும் எட்டப்படவில்லை. எவ்வாறாயினும் சிறிய கட்சிகள், சிறுபான்மை கட்சிகள் தமது ஜனநாயக உரிமையை நிலை நிறுத்த தேர்தல் முறை தொடர்பில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டியுள்ளது என்றார்.
சபையோரின் கருத்துக்களின் பின் தொகுப்புரை வழங்கிய சட்டத்தரணி. இ. தம்பையா ஆட்சியாளர்கள் ஐக்கியப்படாமல் பிரிந்திருக்கும் நிலைமையே மக்களுக்கு சாதகமானது. எனினும் இன்று பிரிந்திருக்கும் ஆட்சியாளர்கள் ஒன்றாக சேரமாட்டார்கள் என்றில்லை. எனினும் மக்கள் ஒன்றுப்பட்டு செயற்பட வேண்டிய தேவையுள்ளது. மக்கள் ஜனநாயகத்திற்காக அணிதிரள வேண்டியுள்ளது. 19வது திருத்தம், தேர்தல் முறை மறுசீரமைப்புகள் ஆளுகை முறையில் செய்யப்படுவுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் தொடர்பில் மக்கள் சார்பாக நின்று கருத்துக்கள் முன்வைக்கப்பட வேண்டும். அது பாராளுமன்றத்திற்குள் இருப்பவர்களில் சாத்தியம் இல்லை என்பது எமக்கு தெரிந்தது. மக்கள் சார்பான அமைப்புகளே அதனை செய்ய வேண்டிய பொறுப்பை கொண்டுள்ளன என்றார்.