இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பில் இந்திய அரசே பல முடிவுகளை மேற்கொண்டு செயற்பட்டது. இனப்பிரச்சனைக்கான தீர்வில் மட்டும் இலங்கை அரசு தலையிடாது என அறிவித்துள்ளது.ஐ.நா.நிபுணர் குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமது நிலைப்பாடு என்ன என்பதை இலங்கை அரசாங்கமே சர்வதேசத்துக்குத் வெளிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருக்கும் இந்தியா, 13 ஆவது திருத்தம் தொடர்பாகவும் இலங்கையே இறுதி முடிவை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கின்றது.
இந்தியாவின் புதுடில்லிக்கு இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளிலிருந்து விஜயம் செய்துள்ள பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய போதே இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பான அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா.பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டால் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஏதாவது எடுக்கப்படும் பட்சத்தில் இலங்கையைப் பாதுகாக்க இந்தியா முன்வருமா என இலங்கைப் பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே நிருபமா ராவ் இதனைத் தெரிவித்தார்.
புதுடில்லியில், சவுத்புளொக் எனப்படும் வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் இலங்கை மற்றும் மாலைதீவுடனான இந்தியாவின் உறவுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இதில் இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் விஷ்ணு பிரசாத் மற்றும் ஹர்ஷ் சிறிங்லா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் அதன் அண்டை நாடுகளான மாலைதீவு மற்றும் இலங்கையுடனான உறவுகள் முக்கியமானவை. அவற்றுடனான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக நிருபமா ராவ் தெரிவித்தார்.
மறைமுக வேலைத்திட்டம் எதனையும் அடிப்படையாகக் கொண்டு இதற்கான செயற்பாடுகளை இந்தியா மேற்கொள்ளவில்லை. இலங்கையின் நலன்விரும்பியாகவே இந்தியா இருக்கின்றது என்று நிருபமாராவ் மேலும் தெரிவித்தார்.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடமைப்பு மற்றும் வடபகுதியில் இந்தியா மேற்கொள்ளும் திட்டங்களையும் அவர் அங்கு விளக்கினார்.