13வது திருத்தம் அமுல்படுத்தப்படாது எனவும், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படாது எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதிமொழி வழங்கியிருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கூறினார்.
“அவ்வாறான உறுதிமொழி வழங்கப்பட்டிருக்காவிட்டால் தமது கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்துகொண்டிருக்காது” என விமல் வீரவன்ச ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டதே சமாதானத்துக்குத் தேவையானதாக இருந்த நிலையில், அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசுவது நேரத்தை வீணடிக்கும் செயலெனக் கூறினார்.
“தற்பொழுது தோன்றியிருக்கும் சமாதானச் சூழ்நிலையைப் பயன்படுத்தி பொருளாதார அபிவிருத்திகளை முன்னெடுப்பதுடன், வடபகுதி மக்கள் ஏ-9 வீதியைப் பயன்படுத்துவதில் காணப்படும் தடைகள் நீக்கப்பட்டு நாடு அபிவிருத்திப் பாதையில் முன்னோக்கிச் செல்லவேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.
அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக ஆராய்வதற்கு சர்வகட்சிக் குழுவொன்றை நியமித்திருக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கையை வரவேற்றிருக்கும் தேசிய சுதந்திர முன்னணி, நாட்டின் அபிவிருத்தி பற்றியே இந்தக் குழு ஆராயவேண்டுமெனவும் கூறினார்.