“13வது திருத்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் 13வது திருத்தம் மாத்திரம் போதுமானதல்ல. சமஷ்டியும் இதற்குத் தீர்வாகும் என நான் நினைக்கவில்லை. எனினும், தற்பொழுது நிலைமை சரியான பாதையில் செல்கிறது எனக் கருதுகிறேன்” என புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.
இதேவேளை, உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் எதிர்காலம் குறித்தே தற்பொழுது கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாக சித்தார்த்தன் அந்த ஊடகத்திடம் தெரிவித்தார்.
“இடம்பெயர்ந்த மக்களுக்குக் கூடிய விரைவில் அவர்களின் சாதாரண வாழ்க்கையைப் பெற்றுக்கொடுப்பதற்கே நாம் முயற்சிக்கின்றோம். அரசாங்கம் தனது 180 நாட்கள் வேலைத்திட்டத்தின் மூலம் என்ன செய்கிறது என்பதை அவதானித்துவருகிறோம்” என அவர் கூறினார்.
இந்த விடயத்தில் கவனம் செலுத்தும் அரசாங்கம் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய தீர்வுத்திட்டமொன்றையும் முன்வைக்க வேண்டுமென சித்தார்த்தன் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை, அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படவேண்டுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானபீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.
“13வது திருத்தச்சட்டம் அரசியல் தீர்வுக்கான அடிப்படையாக இருக்குமென நான் கருதவில்லை. தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தக்கூடிய அவர்களின் ஆட்புல ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தக்கூடிய தீர்வுத்திட்டமொன்றை அரசாங்கம் முன்வைக்கவேண்டும்” என அவர் கூறினார்.
தமிழ் கட்சிகளுடன் இணைந்து இலங்கை அரசாங்கம் அரசியல் தீவுத்திட்டமொன்றைத் தயாரித்து அதனைத் தமிழ் மக்களிடம் சமர்ப்பிக்கவேண்டுமெனவும், தமிழ் சமூகம் அதனைப் பரிசீலிக்கவேண்டுமெனவும் கலாநிதி கீதபொன்கலன் தெரிவித்தார்.
“வடக்கு, கிழக்கில் புதிய கட்டமைப்பொன்று தேவை. அதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் நினைக்கிறேன் நாடு முழுவதற்கும் புதிய கட்டமைப்பொன்று அவசியம். நாட்டிலுள்ள அனைத்து மக்களும் நன்மையடையக்கூடியதாக அப்புதிய கட்டமைப்பு அமையவேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.
“முன்னர் தமிழ் சமூகம் அரசியல் தீர்வு விடயத்தில் பிரதான பங்காற்றமுடியாத நிலையிருந்தது. ஆனால் தற்பொழுது அந்த நிலை மாறியுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தை தமிழ் சமூகம் சரியாகப் பயன்படுத்தவேண்டும்” என கலாநிதி கீதபொன்கலன் அந்த ஊடகத்திடம் தெரிவித்தார்.