09.09.2008.
13வது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரம் கிழக்குக்குத் தேவையில்லை என்று, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.
டெய்லி மிறர் பத்திரிகையின் சகுந்தலா பெரேராவுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
கிழக்கை பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்வதே தமது பிரதான நோக்கம் என்றும் இந்தச் செவ்வியில் மேலும் தெரிவித்துள்ள அவர், இதுதொடர்பில் ஜனாதிபதியுடன் தான் இணைந்து பணியாற்றவிருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஆயுதங்கள் இனித் தேவையில்லை
சிறுவர்களைப் படைக்குச் சேர்த்தமை தொடர்பாகத் தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களை இந்தச் செவ்வியில் திட்டவட்டமாக மறுத்துரைத்த கருணா,
“எனக்கு இனிமேல் ஆயுதம் தாங்கிய நபர்கள் தேவையில்லை. எனக்கும், பிள்ளையானுக்கும், ஏனைய மாகாணசபை உறுப்பினர்களுக்கும் தேவையான பாதுகாப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது’’ என்று விபரித்துள்ளார்.
தம்முடனிருந்த ஆயுதம் தாங்கிய நபர்கள் படிப்படியாக இராணுவத்திலும், சிவில் பாதுகாப்புப் படையிலும் இணைத்துக்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்தச் செவ்வியில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர்,
13வது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரங்கள் கிழக்குக்குத் தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.
தீர்வுக்கு பிரபாகரன் தயாரில்லை
தற்போது முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளின் முடிவில் ஒரு அரசியல் தீர்வு முன்வைக்கப்படவேண்டுமா என்று எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த கருணா, பிரபாகரன் ஒருபோதும் அரசியல் தீர்வை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்றும், அவர் ஆயுதங்களைக் கைவிடப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
“ஒவ்வொரு சமாதான முயற்சிகளையும் தன்னைப் பலப்படுத்துவதற்கே அவர் பயன்படுத்தினார்’’ என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
எனினும், கடந்த காலங்களில் இலங்கையின் எல்லா அரசாங்கங்களும் தமிழ்-சிங்கள இனவாதத்தைப் பயன்படுத்தி அரசியல் நடத்தியதாலேயே இன்றைய பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதற்கு நிச்சயம் ஒரு தீர்வு காணப்படவேண்டியது அவசியம் என்றும் கருணா இந்தச் செவ்வியில் வலியுறுத்தியுள்ளார்.
இராணுவத்திடம் இப்போது நல்ல தந்திரோபாயம் உண்டு: கருணா
இலங்கை இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நல்ல தந்திரோபாயத்துடன் செயற்படுகின்றனர் என்று இந்தச் செவ்வியில் குறிப்பிட்டுள்ள கருணா, இராணுவத்தினர் இப்போது தம்மை நன்கு ஒழுங்குபடுத்தியுள்ளனர் எனவும், இதனால் விடுதலைப் புலிகள் ஆளணி மற்றும் தலைமைப் பிரச்சினையைக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற பல சண்டைகளில் விடுதலைப் புலிகளின் அணிகளுக்குத் தலைமைதாங்கி நின்றவரான கருணா, இம்முறை விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டையில் இராணுவம் வெற்றியடைவது நிச்சயம் என்று இந்தச் செவ்வியில் உறுதிபடக் கூறியுள்ளார்.
ஜானக பெரேரா
இலங்கை இராணுவத்தின் முன்னாள் முக்கிய இராணுவத் தளபதி ஜெனரல் ஜானக பெரேராவின் கொலை தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களை இந்த நேர்காணலில் மறுத்துரைத்த கருணா,
“பல களங்களில் அவரை நான் எதிர்கொண்டிருக்கிறேன். ஒரு இராணுவ அதிகாரி என்ற வகையில் அவரைத் நான் மிகவும் மதித்தேன்’’ என்று கூறியதுடன், “ஒரு போர் வீரனான அவரது மரணச் செய்தி கேட்டு நான் மிகவும் கவலையடைந்தேன்’’ என்றும் கூறியுள்ளார்.
எல்லாக் கட்சிகளும் பிரிய உதவின
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டபோது, அது ஒரு சமஸ்டித் தீர்வுக்கான ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று தான் பிரபாகரனிடம் எடுத்துக்கூறியதாகவும், எனினும், அவர் அதனை ஏற்றுக்கொள்ளாததாலேயே பிரிந்துசெல்வது என்று தான் தீர்மானித்ததாகவும் கருணா கூறியுள்ளார்.
போர்நிறுத்த உடன்படிக்கை காலத்தில் புலிகளோடு இருந்தபோது தன்னுடன் கைகுலுக்கிப் பேச்சுவார்த்தை நடாத்திய ஐக்கிய தேசியக் கட்சி, இப்போது தான் பிரதான அரசியல் நீரோட்டத்தில் இணைவதற்கு எதிர்ப்புக் காட்டுவது ஏன் என்று தனக்குப் புரியவில்லை என்று கூறியிருக்கும் கருணா,
“அனைத்துக் கட்சிகளுமே நான் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிவதற்கு உதவின. ஒரு ஐ.தே.க. அரசியல்வாதியுடனே நான் கொழும்பு வந்தேன். இன்று அவர்கள் புதிய அரசியல் செய்கிறார்கள்’’ என்று குற்றஞ்சாட்டினார்.
“முன்னாள் கெரில்லா தலைவர் ஒருவரே இன்று நேபாள ஜனாதிபதியாக இருக்கிறார். அயர்லாந்திலும் இதுவே நடந்தது. இந்த அனுபவங்களைப் புரிந்துகொள்வதற்கு போர்நிறுத்த உடன்படிக்கை காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியே எமக்கு உதவியது. ஆனால், இன்று நான் பாராளுமன்ற உறுப்பினர் ஆவதை இவர்கள் எதிர்க்கிறார்கள்’’ என்று கருணா மேலும் இந்தச் செவ்வியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.