1.
“எனக்கு பசிக்கின்றது” …….சோகத்தில் குரல் தேய்ந்து ஒலிக்கின்றது.
“எனது சப்பாத்துக்குள் கற்கள் சென்றுவிட்டன”
“எனது கால் வலிக்கின்றது”
“என்னை ஏன் அழைத்துச் செல்கின்றார்கள், நான் எதுவம் செய்யவில்லையே?” ………மரண பயம் முகத்தில் தெரிகின்றது
“என்னை கொலை செய்யப் போகின்றார்கள்” ……….பயத்தில் குரல் நடுங்குகின்றது
இவை யாரின் குரல்கள்?
போராளிகள்!!!!
ஆம், ஆனால் இவர்களுக்கு வயது வெறும் 11.
சிறிது நேரத்தில் இராணுவம் அழைத்துச் சென்ற நால்வரில் மூவர் தலையில் சுடப்பட்டு கொல்லப்படுகின்றனர். அருகே துப்பாக்கிச் சத்தம் கேட்க மற்றச் சிறுவன் சவா தப்பிவிடுகின்றான். சவாவின் கதைக்குச் செல்ல முன்னர்…
எந்த நாட்டு இராணுவம் இதைச் செய்தது? இராணுவத்திற்கு உதவி செய்பவர்கள் யார்? கண்களை மூடிக் கொண்டே உடனடியாக அமெரிக்கா என பதில் சொல்ல முடியும்.
2.
எல் சல்வடோரின் உள் நாட்டு யுத்தம் 1980 க்கும் 1992 க்குமிடைப்பட்ட பகுதியில் இடம் பெற்றது. இராணுவ அரசுக்கும் இடது சாரி கூட்டு முண்ணனியான Farabundo Martí National Liberation Front (FMLN) க்குமிடையில் இவ் யுத்தம் இடம் பெற்றது. ஜக்கிய அமெரிக்கா இராணுவ அரசுக்கு ஆதரவளித்தது. 1980 மார்கழி 2 ல் நான்கு அமெரிக்க தாதிகளை அரச தேசிய படை பாலியல் வல்லூறுக்குட்படுத்தி கொலை செய்தது. அது வரை நிழல் போல் வெளியே தெரியாமல் செய்து வந்த அமெரிக்கா உதவிகள் வெளிச்சத்துக்கு வந்தன. ஜிம்மி கார்ட்டரின் அரசு சுமார் 7 பில்லியன் டொலர்களை உதவியாக வழங்கியிருந்தது. இச் சம்பவத்தின் பின்னர் கார்ட்டர் நிதி உதவியை நிறுத்தியிருந்தார். வலது சாரி அமைப்புக்கள் இதனை எதிர்த்தனர். றீகன் பதவிக்கு வந்த பொழுது இவ்வுதவியை அதிகரித்தார். அது மாத்திரமல்ல 46 அமெரிக்க இராணுவ அதிகாரிகள் ஆலோசகர்களாக எல் சல்வடோரில் கடமையாற்றினர். ஜோர்ஜியாவில் உள்ள The Western Hemisphere Institute for Security Cooperation (WHISC or WHINSEC), formerly the School of the Americas (SOA) இராணுவ கல்லூரியில் எல் சல்வடோர் இராணுவ அதிகாரிகள் பயிற்றுவிக்கப்பட்டனர். இக் கல்லூரியின் முன்னால் மாணவர்கள் சிலர் பனாமாவின் இராணுவ அதிபர் Manuel Noriega கௌதமாலாவின் Efraín Ríos Montt பொலிவியாவின் Hugo Banzer என்ற மெக்சிக்கோவின் போதை மருந்து வியாபாரத் தளத்தின் ஆரம்பகர்த்தாக்கள் போன்றோர் இங்கு கல்வி கற்றனர்.
இந்த யுத்தத்தின் போது பல கிறிஸ்தவ பாதிரிகள், ஆர்ச் பிசப் ரோமாரியோ உட்பட கொலை செய்யப்பட்டனர். அமெரிக்கா Death Squad எனப்படும் படுகொலை இராணுவ பிரிவை எல் சல்வடோர் இராணுவத்தில் தோற்றுவித்தது. இதில் அங்கத்தவர்களாக இருந்த சில அதிகாரிகளின் வாக்கு மூலங்கள் திடுக்கிடவைக்கின்றன. Joya Martinez ன் கூற்றின் பிரகாரம் துப்பாக்கிச் சன்னங்களை பாவிக்காமல் கலுத்தை நெரித்துக் கொல்லல், நஞ்சு கலந்த மருந்தை ஊசி மூலம் செலுத்தல் போன்ற முறைகளில் பலரை கொன்றதாக தெரிவித்துள்ளார். இவர்கள் பிரதானமாக இடது சாரி போராளிகள், சிறுவர்கள், மாணவர்களை குறிவைத்து கொலை செய்தது.
1990ல் Alfredo Cristiani ன் அரசாங்கம் FMLN உடன் ஏற்பட்ட உடன்பாட்டுடன் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. கோப்பிக்கு பிரபல்யம் பெற்ற எல் சல்வடோரின் 60 வீதமான நிலங்கள் 2வீதமானோரிடம் இருந்தது. போரின் பின்னர் 82 வீதமான கோப்பித் தோட்டங்கள் சிறு உற்பத்தியாளர்களிடமுள்ளது. 25 வீதமான எல் சல்வடோர் பிரசைகள் அமெரிக்காவில் வாழ்கின்றனர். (ஈழப் போரின் பின்னர் நாட்டை விட்டு வெளியேறிய தமிழர்களின் தொகை அங்கு வாழ்வோரின் தொகையை விட அதிகம்).
3.
ஏல் சல்வடோர் யுத்தத்தில் சிறார்கள் யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டார்கள். FMLN மற்றும் அரச படைகள் சிறார்களை யுத்தத்தில் ஈடுபடுத்தியதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இலங்கை, பாலஸ்தீனியம், மத்திய ஆபிரிக்கா, லைபீரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற பல நாடுகள் யுத்தத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆப்கானில் கொல்லப்பட்ட முதல் அமெரிக்க அதிகாரியை தை 4-2002ல் (Sergeant First Class (SFC) Nathan R. Chapman) கொன்றவர் ஒரு சிறுவன்.(இதனை அமெரிக்கா தான் கூறுகின்றது) பர்மாவில் கடவுளின் இராணுவம் என அழைக்கப்படும் Karen National Army ன் முக்கியஸ்தர்கள் 12 வயது இரட்டையர்கள் Luthur and Johnny Htoo.
The UN Truth Commission ன் அறிக்கை 85 வீதமான மனித உரிமை மீறல்கள் அரச படைகளாலும் 5வீதமானவை போராளிகளாலும் மேற்கொள்ளப்பட்டன என உறுதிப்படுத்தியுள்ளது. பாடசாலைகளில் மட்டுமல்லாது மக்கள் கூடும் பொது இடங்களில் இருந்தும் உடலுறுதியுள்ள சிறுவர்கள் இராணுவத்தால் பயிற்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். (வயதெல்லையற்று). 1985ல் அரசாங்கம் 400 பாடசாலைகளை மூடியது. அங்கு போராளிகளின் நடவடிக்கைகள் அதிகம் என்ற காரணத்தால். யுனெசெப்பின் அறிக்கையின் படி போராளிகள் சராசரி 12வயது சிறுவர்களை போரில் ஈடுபடுத்துகின்றது. அரசாங்கம் 15 வயது பிள்ளைகளை போரில் ஈடுபடுத்துகின்றது. மக்களுக்காக களம் இறங்கிய மதகுருக்கள் தொழிலாளர்கள் கழகங்களை ஆதரித்தன. ஆரசாங்கம் இதற்கெதிராக சட்டம் கொண்டு வந்தது. கிறிஸ்தவ மதபீடம் தெளிவாக தனது கருத்துக்களை முன்வைத்து போராடியது.Children are innocent victims; Children are free of suspicion; Children have a right to life; and Children represent a path to peace
போரின் பின்னர் வெறும் 10 வீதமான சிறுவர்களே பாடசாலைக்கு திரும்பிச் சென்றனர். அரச படைகளில் இருந்த சிறுவர்களில் சுமார் 25 வீதமான சிறுவர்கள் கல்வியறிவற்றவர்கள். போராளிகள் சிறுவர்களுக்கான மாற்றீடுகளை முன் வைத்த போதும் சிறுவர்கள் போரில் பங்கு பற்றியதன் மூலம் பல உள, உடல் பிரச்சனைகளை சந்தித்துள்ளனர். விளையாட்டு நேரம், கல்வி போன்றனவற்றுடன் பெற்றோர், சகோதரர்களை பிரிந்த மன உளைச்சல், பல கொலைகளை நேரில் பாhத்தால் ஏற்பட்ட மன பாதிப்பு போன்ற பல் வேறு உளப் பிரச்சிகைள் அவர்களிடம் உள்ளன. இதனை யுனிசெப் போன்ற நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அரசு பெரிதாக எந்த மாற்றுத் திட்டத்தையும் முன்வைக்கவில்லை. The study showed that the numbers of child soldiers meeting symptom cutoff scores on various measures and scales were 75 for depression, 65 for anxiety, 78 for PTSD, 55 for general psychological difficulties, and 88 for function impairment.
4.
FMLN மற்றும் அரச படைகள் 12 வயதிற்கு மேற்பட்டவர்களை போரில் ஈடுபடுத்தியது. 12 வயதிற்கும் குறைவான சிறார்களும் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். FMLN அரசின் கொலை வெறிக்கு எதிராக சிறார்கள் தாங்களாக சமூக நோக்குடன் தங்களுடன் இணைந்ததாக கூறினர். இது வாதத்துக்கு சரியாக இருந்தாலும், இந்த வயதில் சமூகப் பார்வை ஏற்படுமா என்ற கேள்வி விமர்சகர்களிடம் இருந்து எழுந்துள்ளது. சிறார்களை பாதுகாக்க அரசு, சிறார்களை பாழடித்துவிட்டது. 12 வயதில் 7ம் வகுப்பு படிக்கும் இச் சிறார்கள் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போரின் பின்னர் 10 வீதமே பாடசாலைக்கு மீண்டும் சென்றுள்ளது. இந்த போர் சுமார் 90 வீதமான சிறார்களை 7ம் வகுப்பிற்கு மேல் நகர விடவில்லை. போர் நடந்த காலங்களில் இருந்த சந்ததிகள் 6, 7ம் வகுப்பிற்கு மேல் நகர விடாமல் தடுத்துவிட்டார்கள். இது சிறார்களை போரில் ஈடுபடுத்திய அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.
5.
எல் சல்வடோரில் நடைபெற்ற உள் நாட்டு யுத்தத்தில் நடைபெற்ற கதையே Innocent Voices. யுத்தம் ஆரம்பிக்க முன்னரே தனது மனைவி கெலாவையும் மூன்று குழந்தைகளையும் விட்டு விட்டு தந்தை அமெரிக்கா சென்று விடுகின்றார். சவா இக் குடும்பத்தின் மூத்த பிள்ளை. வயது 11. தாய் கெலா தைப்பதுடன், மாலை நேரங்களில் வேலைக்கும் சென்று குடும்பத்தை காப்பாற்றுகின்றார். சவா பாடசாலைக்கு செல்வதுடன் பகுதி நேர வேலையும் செய்கின்றான். இரவில் தாய் வேலை விட்டு வர முன்னர் பல நேரங்களில் இராணுவமும் போராளிகளும் சண்டையில் ஈடுபடுகின்றனர். சவாவின் வீட்டு யன்னல்களை துளைத்து சன்னங்கள் பாயும். தனது சகோதரியையும், கைக்குழந்தையும் அணைத்து கட்டிலின் கீழே பதுங்கி அவர்களை காப்பாற்றுகின்றான். அந்த பதட்டமான சூழலிலும் அழும் கைக் குழந்தையை ஆறுதல் படுத்த முகத்தில் கோடுகள் கீறி சமாதானப்படுத்துகின்றான். ஒருவாறு மூன்று உயிர்களும் தப்பி பிழைத்து வருகின்றன. அந்த வீட்டின் ஆண் மகன் man of the house) என தாய் அவனை அழைப்பார். ஒரு வருடத்தின் பின்னர் அவன் இராணுவத்தில் சேர வேண்டும். இதற்கிடையில் தனது வகுப்புத் தோழியுடன் இவனுக்கு முதல் காதலும் அரும்புகின்றது.
12வயது வந்தவுடன் இவர்கள் இராணுவத்தில் சேர வேண்டும். சவா இதனை பல தடவைகள் சந்தித்துள்ளான். பாடசாலைக்கு வரும் இராணுவ அதிகாரிகள், அதிபரிடம் பிள்ளைகளின் வயதினை அறிந்து 12வயது வந்தவர்களை இராணுவ பயிற்சிக்கு அழைத்துச் செல்வார்கள்.பாடசாலையின் பொது இடத்தில் அனைத்து மாணவர்களும் வரிசையில் நிற்பார்கள். அதிபர் பெயர்களை வாசிப்பார். அந்த மாணவர்கள் முன் வந்து இராணுவத்துடன் செல்ல வேண்டும். சில சமயங்களில் உருவ மாறுபாட்டாலும், இராணுவ அதிகாரிகள் முன்பு நடக்கும் நடவடிக்கைகளாலும் 12வயதுக்கு குறைந்தவர்களையும் இராணுவ வீரர்கள் அழைத்துச் செல்வார்கள். இந்த மாணவர்களின் பெற்றோருக்கு கூட இவர்கள் சென்ற பின் தான் தெரிய வரும்.
சவாவின் குடும்பம் வாழும் பிரதேசம் கடும் மழைபெய்யும் பிரதேசம். ஓவ்வொரு நாளும் கடும் மழையில் கூட பல உயிர்கள் கொல்லப்பட்டன. இக் கிராமத்தில் உள்ள பாதிரியாரும் இச் சிறுவர்களுக்காக குரல் எழுப்புவார். பல நேரங்களில் இராணுவத்தின் அடி, உதைகளை இப் பாதிரியாரும் சந்தித்துள்ளார்.
தாய் கெலாவின் சகோதரன் பீற்றோ ஒரு பல்கலைக் கழக மாணவன். பீற்றோ, சவாவை தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்புகின்றான். பீற்றோ தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளவன். கெலா, சவாவை பீற்றோவுடன் அனுப்ப மறுத்துவிடுகின்றாள். “நீங்களும், இராணுவத்தைப் போல் சிறுவர்களை போரில் ஈடுபடுத்துகின்றீர்கள்” என குற்றஞ்சாட்டுகின்றாள். பீற்றோ சவாவிற்கு பல விடயங்களை கற்பிப்பதனுடன் ஒரு வானொலியையும் கொடுத்துவிட்டு செல்கின்றான். தடைசெய்யப்பட்ட போராளிகளின் வானொலியை இதில் கேட்கலாம்.
சவாவிற்கு இப்பொழுது இராணுவம் வரும் போது பதுங்கும் தந்திரமும் தெரிகின்றது. ஒரு கடுமையான போரின் பின்னர், சவாவும், அவனது சில நண்பர்களையும் இராணுவம் பிடித்துவிடுகின்றது. கைகளை பின்னே கட்டியபடி அவர்களை இராணுவம் அழைத்துச் செல்கின்றது. சவா மாத்திரம் தப்பிவிடுகின்றான். மற்றவர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றார்கள். தப்பிய சவா பாதிரிகள் மூலம் அமெரிக்கா செல்கின்றான்.
சிறுவர்களினதும், வறுமைக் கோட்டின் கீழ் வசிப்பவர்களது குரலாகவும் இப் படம் ஒளிக்கின்றது. இந்த இராணுவத்திற்கே
அமெரிக்கா உதவியும், உபசரணையும், ஆலோசனையும் வழங்குகியது. Director Luis Mandoki மெக்சிக்கோவைச் சேர்ந்தவர். சிறுவர்களது வலியை சிறுவர்களது பார்வையிலேயே வழங்கியுள்ளார். மக்கள் தமது ஷநலனுக்காக போராடும் போராளிகளையும் விமர்சனக் கண்கொண்டே பார்க்கின்றார்கள். ஒரு பக்கம் போரையும் தூண்டி விட்டு மறு புறம் சிறுவர்களையும் ஏற்றுக் கொண்டு அமெரிக்கா நல்ல பிள்ளையாக வலம் வருகின்றது. இந்த போரின் பின்னர் செல்வந்தர்களின் பண்ணைகள் சிறு உற்பத்தியாளர்களுக்கு கைமாறிய போதும், பேச்சுவாhத்தைகள் வழங்கப்பட்ட நிலங்கள் முறையாக வழங்கப்படவில்லை. நிலம் வாங்குவதற்கான கடன்களையே அரசு வழங்கியது. நிலமும் சந்தை நிலை விலைக்கே கொடுக்கப்பட்டன. இன்றும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் மொத்த சனத் தொகையில் 42 வீதமானோர்.இப் படத்தின் திரைக்கதையாசிரியர் Oscar Torres ன் வாழ்க்கைச் சம்பவங்களே இப் படம்.
விடுதலைப் புலிகளின் குழந்தைப் போராளிகள் பற்றி குறிப்பிடவில்லையே?
நாடு கடந்த ஈழம் என மக்களை திசை திருப்பும் இவ் வேளையில் இது போன்ற கட்டுரைகள் தோல்வியுற்ற போரை மீள ஆய்வு செய்ய உதவும். விடுலைப் புலிகள் பெருமளவில் சிறுவர்களை போரில் பயன்படுத்தியுள்ளது. கரும் புலிகளிலும் பலர் இருந்துள்ளார்கள். அரசும் சிறுவர்களை இராணுவத்தில் சேர்த்துள்ளது. இவை பற்றிய கருத்துக்களையும் கட்டுரையில் முன் வைப்பது அவசியம்.
இந்தக் கட்டுரை ஒரு குறிப்பிட்ட அரசியற் சூழலுக்குரியது.
அதிலிருந்து நாம் என்ன கற்க முடியும் என்பதை விடுத்துக் கட்டுரை ஏன் இலங்கை பற்றிப் பேசவில்லை என்று விவாதிப்பது பொருத்தமற்றது என்றே தெரிகிறது.