12 வருடங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்று 11 வருடங்களாக சம்பளமும் விடுமுறையும் கிடைக்காது இருந்த இலங்கை பெண்ணொருவர் தூதரக அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளார்.
சவூதி அரேபியாவின் கிழக்கு அல் கோபார் பிரதேசத்தில் தூதரக அதிகாரிகள் நடத்திய நடமாடும் சேவையின் போது அனுராதபுரத்தை சேர்ந்த இந்த பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பெண்ணுக்கு புதிய கடவூச்சீட்டு ஒன்றை பெறுவதற்காக பெண்ணின் எஜமான் என கூறப்படும் நபர் தனது மனைவியுடன் பெண்ணை அழைத்து வந்திருந்தார்.
இலங்கை தூதரகத்தின் தொழிலாளர் நல அதிகாரி ரொஷான் குணவர்தன, பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அவர் 12 வருடங்களாக வீட்டுப் பணிப்பெண்ணாக இருப்பதும் 11 வருடங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது.
12 வருடங்களாக இலங்கைக்கு செல்லாத இந்த பெண் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
தொலைபேசியை பயன்படுத்த அனுமதிக்கவில்லை எனவும் தனக்கு இந்த நபர்களுடன் செல்ல முடியாது எனவும் இலங்கை பெண், தொழிலாளர் நல அதிகாரியிடம் கூறியுள்ளார்.
அத்துடன் எப்படியாவது தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறும் அவர் கேட்டுள்ளார். இந்த பெண் சிங்கள மொழியை கூட சரியாக பேச முடியாதவராக காணப்பட்டுள்ளார்.
உடனடியாக செயற்பட்ட தூதரக அதிகாரிகளான அஹமட் நுஷ்ரத் மற்றும் யசீர் ஆகியோர் தந்திரமான முறையில் சிரிய பிரஜையான பெண்ணின் எஜமானிடம் சகல தகவல்களையும் எழுத்து மூலமும் வாய்மொழி மூலமும் பெற்றுக்கொண்டனர்.
இந்த சாட்சியங்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், சட்டரீதியான நிலைமை மற்றும் பாரதூரம் குறித்து தெளிவுபடுத்தியதுடன், 11 வருட சம்பளமாக குறைந்தது 80 ஆயிரம் சவூதி ரியால்களை பெண்ணுக்கு செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
பணத்தை கொடுக்காவிட்டால், சட்டரீதியான நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனையடுத்து கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதும் பணத்தை வழங்கி பெண்ணை இலங்கைக்கு அனுப்பி வைப்பதாக குறித்த நபர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
தொழிலாளர் நல அதிகாரியான ரொஷான் அவரின் யோசனைக்கு இணங்கவில்லை. பெண்ணை உடனடியாக தூதரகத்தின் பொறுப்பில் எடுத்துக்கொண்ட அவர், ரியாத்தில் உள்ள பிரதான அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன் எஜமானை விடுத்துள்ளார்.
இந்த பெண் பற்றிய எந்த தகவல்களும் தூதரகத்தில் இருக்கவில்லை என தொழிலாளர் நல அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெண்ணின் உறவினர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் சில முறைப்பாடுகளையும் செய்திருந்தனர். இவற்றையும் அதிகாரிகள் சவூதி நபரிடம் காட்டியுள்ளனர்.