10.5 மில்லியன் குழந்தைகள் வீடுகளில் வேலையாட்களாக வேலை பார்க்கின்றனர். இவர்களில் ஆறரை மில்லியன் குழந்தைகள் ஐந்து வயதுக்கும் பதின் நான்கு வயதுக்கும் இடைப்பட்டவர்கள். குழந்தை பராமரித்தல், சுத்திகரித்தல், தோட்டவேலைகள், சமையல் போன்ற பல வேலைகளைக் கவனிக்கும் இக்குழந்தைகள், உளரீதியாகவும் உடல்ரீதியகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இத்தகவல்களை சர்வதேச உழைப்பாளர் அமைப்பு என்ற தன்னார்வ நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமது குடும்பங்களிலிருந்து அன்னியப்படுத்தப்பட்டு, பொதுமக்களின் கண்களிலிருந்து மறைக்கபட்டு தமது எஜமானர்களில் தங்கியுள்ளவர்களாக மாறிவிடுகின்றனர். பலர் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தப்படும் நிலையில் உள்ளனர் என அந்த நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது.
கொத்தடிமைகள் போன்று இக்குழந்தைகள் பயன்படுத்தப்படுகின்றனர் என மேலும் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் மலையகக் குழந்தைகளில் பலர் இவ்வாறான கொத்தடிமைகளாக இன்னும் பயன்படுத்தப்படுகின்றனர். எண்பதுகளின் மத்திய பகுதிவரைக்கும் மலையகத் தமிழ்க் குழந்தைகள் யாழ்ப்பாண மேட்டுக்குடிகளின் வீடுகளில் கொத்தடிமைகளாக வேலைசெய்தல் என்பது நாளாந்த வழமையாகக் காணப்பட்டது.