10 ஆயிரம் இராணுவத்தினர் அவசரமாக தேவை: கோத்தபாய

தமிழீழ விடுதலைப் புலிகள் வீழச்சி கண்டு வருகின்றனர். அவர்களை முறியடிப்பதற்கு மேலும் 10 ஆயிரம் இராணுவத்தினர் தேவை.

எனவே இராணுவத்திலிருந்து தப்பியோடியோர் மீண்டும் வர வேண்டும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சீட்டுக்கட்டில் இருந்து உதிரும் சீட்டுக்களைப் போன்று விடுதலைப் புலிகள் வீழ்ச்சி கண்டு வருகின்றனர். எனவே அவர்களை மேலும் முறியடிப்பதற்கு இராணுவத்திலிருந்து தப்பியோடிய 10 ஆயிரம் பேர் மீண்டும் திரும்ப வேண்டும்.

கடந்த நான்கு முதல் ஐந்து வருடங்களுக்குள் தப்பியோடியவர்கள் இராணுவத்திற்கு அவசரமாக தேவைப்படுகின்றனர். அவர்கள் பல்வேறு தனிப்பட்ட காரணங்களால் தப்பியோடியிருக்கலாம்.

எனினும் அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பவேண்டும்.
தப்பியோடிய இராணுவத்தினரின் பயிற்சிகளுக்காக நாம் பெருமளவு நிதியையும், நேரத்தையும் செலவிட்டுள்ளோம், ஆனால் அவர்கள் தனிப்பட்ட காரணங்களை முன்வைத்து தப்பியோடியுள்ளனர்.

தப்பியோடியவர்களை மீளச்சேர்க்கும் பணிகளை நாம் முடுக்கி விட்டுள்ளோம். தப்பியோடிய எல்லோரும் பணிக்கு திரும்ப வேண்டும்.

போர் ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. இராணுவத்தினரின் கரம் மேலோங்கியுள்ளது. அவர்களுக்கு எல்லாத்தரப்பினரின் உதவிகளும் தேவை.

விடுதலைப் புலிகள் முறியடிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் முற்றாக முறியடிக்கப்படும் காலம் அதிக தொலைவில் இல்லை.

எனவே இராணுவத்திலிருந்து தப்பியோடியோர் விரைவாக மீண்டும் பணியில் சேர்ந்து, தற்போது வடபகுதியில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டும் என்றார் அவர்.