27.09.2008.
இலங்கையின் வடபகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்கள் குறித்து தமது ஆழ்ந்த அக்கறையை வெளியிட்டுள்ள பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன, மோதலில் சிக்குண்டுள்ள மக்களின் பாதுகாப்பையும், நடமாடும் சுதந்திரத்தையும் அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் உறுதிப்படுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள விசேட அறிக்கையொன்றில், “வன்னியிலிருந்து பொதுமக்கள் சுதந்திரமாக வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்கவேண்டும்’’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய வெளிவிவகார அலுவலக கனிஸ்ட அமைச்சர் மார்க் அலொக் பிரௌன் மற்றும் நிவாரண உதவி அமைச்சர் சாஹிட் மாலிக் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள இந்தக் கூட்டறிக்கையில், அண்மைக்காலமாக வடபகுதியில் வன்முறைகள் மோசமாக அதிகரித்துள்ளமை தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் தீவிர அக்கறை கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் மீதான தமது கடப்பாட்டை உணர்ந்து, மனிதாபிமான முகவர் அமைப்புக்களின் சுதந்திரமான நடமாட்டத்தையும், முரண்பாட்டினால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவேண்டும் என இரண்டு தரப்புக்களையும் நாம் கோருகிறோம்’’ என்று குறிப்பிடும் அந்த அறிக்கை,
“பொதுமக்களின் சுதந்திர நடமாட்டத்தை அனுமதிப்பதற்கு விடுதலைப் புலிகள் அவசர நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
முரண்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு வேண்டிய மனிதாபிமான உதவிகளை வழங்கும் பொறுப்பை இலங்கை அரசாங்கம் உணர்ந்துகொண்டுள்ளமையையும், மனிதாபிமான முகவர் அமைப்புக்களுடன் அவர்கள் இணைந்து பணியாற்றி வருவதையும் தாம் வரவேற்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றிருக்கும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, பிரித்தானிய பிரதமர் கோர்டன் ப்ரௌன் கூட்ட அமர்வுகளிடையே சந்தித்து இலங்கை நிலைமைகள் குறித்து கலந்துரையாடியிருப்பதாகவும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது.
சர்வதேச கண்காணிப்புடன் வன்னிக்கு நிவாரணம்
இதேவேளை, சர்வதேச கண்காணிப்புடன் நிவாரண உதவிகள் மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்தவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு ஆணையாளர் பெரேரோ லோல்டெனோ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இணைத்தலைமை நாடுகளின் சந்திப்பின் பின்னர் வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் பொதுமக்களினதும், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களினதும் உரிமைகளை, சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அடிப்படையில் முழுமையாக மதித்து நடக்கவேண்டும் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வோல்டெனோ அம்மையார்,
பொதுமக்களின் பாதுகாப்பும், நடமாட்ட சுதந்திரமும் மிகவும் முக்கியமானது என்றும் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.