வன்னியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2:00 மணி முதல் பாதுகாப்பு வலயம் மீது
இலங்கை இராணுவம் கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளது .
மாத்தளன், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இலங்கை இராணுவம் தரை வழியாக முன்னேறும் கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளதால், பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்கள் பாரிய மனித அவலத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
ஏக காலத்தில் மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம், மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளிலுள்ள பாதுகாப்பு வலயம் மீது கடுமையான தாக்குதலையும் படையினர் ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை பாதுகாப்பு வலய பகுதியை கைப்பற்றும் நோக்கில் இராணுவம் நடத்திய தொடர் தாக்குதல்களின் ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் அதை விட பல மடங்கு அதிகமானவர்கள் காயமடைந்துமுள்ளதாக கள முனை தகவல்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக பாதுகாப்பு வலய பகுதிகளில் காயமடையும் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கி வந்த புதுமாத்தளன் வைத்தியசாலையின் நடவடிக்கைகள் தடைப்பட்டு உள்ளதாகவும் அங்கிருந்து மருத்துவ சேவையாளர்கள் வேறு பகுதிகளை நோக்கி இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வன்னி மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி வந்த ஒரேயொரு மருந்துவ நிலையமும் தனது இயக்கத்தை நிறுத்தி கொண்டுள்ளதால் மிகப்பெரிய மனிதப் பேரவலம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 29ம் திகதி ஐநாவின் பாதுகாப்பு பேரவையில் இலங்கை விவகாரம் ஆராயப்படவுள்ள நிலையில் அதற்கு முன்பாக வன்னியில் இருந்து பொதுமக்களை முற்றாக வெளியேற்றுவதே இலங்கை அரசாங்கத்தின் திட்டம் என தெரியவந்துள்ளது.