ராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் ரூ.5 கோடிக்கு அந்நிய செலாவணி இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சிறிலங்கா கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த வேலை நிறுத்தத்தால் 3,000 மீனவர்கள் பாதிக்கப்பட்டனர். 850 எந்திர விலைப் படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தது.
13 நாட்களாக நடைபெற்ற இந்த வேலை நிறுத்தத்தால் ரூ.4.80 கோடிக்கு அந்நிய செலாவணி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ரூ.24 கோடிக்கு மீன்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து இறால், வஞ்சரம், நண்டு உள்பட பல்வேறு வகை மீன்கள் கொச்சி, தூத்துக்குடி, சென்னை ஆகிய துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும். இந்த வேலை நிறுத்தத்தால் அவை முடங்கி போய் இருக்கிறது.
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மீன்பிடி துறைமுகமான ராமேஸ்வரத்தில் வேலை நிறுத்தம் காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.