22.09.2008.
பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியாக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள ‘பிங் பேங்’ சோதனை இயந்திரத்தில் பெருமளவில் ஹீலியம் வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சோதனையின் அடுத்த கட்டத்திற்குச் செல்வதில் சிக்கல் உருவாகியுள்ளது.
சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட மிகப்பெரிய அணு சக்தி மோதலில்தான் பிரபஞ்சம் தோன்றியது என்ற பிக் பேங் (பெரு வெடிப்பு) கோட்பாடே இன்றளவும் நம்பப்பட்டு வருகிறது. பூமி உருவாகி உயிர்கள் தோன்றவும் இதுவே காரணம் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில் பிரபஞ்சம் தோன்றியபோது உருவான அணு சக்தி மோதலை தற்போது உருவாக்கி, அதன்மூலம் பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தைக் கண்டறிய 36 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் முயற்சித்து வருகின்றனர்.
இதற்காக அவர்கள் பிரான்ஸ்- சுவிட்சர்லாந்து எல்லையில் பூமிக்கு அடியில் 100 மீ ஆழத்தில் சுமார் 27 கிலோ மீட்டர் சுற்றளவில் ‘பிங் பேங்’ சோதனை மையத்தை அமைத்துள்ளனர்.
இங்கு அமைக்கப்பட்டுள்ள வட்ட வடிவக் குழாயின் இரு புறங்களில் இருந்தும் புரோட்டான்களை செலுத்தி நேருக்கு நேர் மோதவிட்டு, அப்போது உருவாகும் மாற்றங்களை ஆயிரக்கணக்கான கருவிகள் மூலம் ஆய்வு செய்து பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தைக் கண்டுபிடிக்க உள்ளனர்.
திரவ ஹீலியம் வாயுக் கசிவு!
புரோட்டான்கள் மோதும்போது ஏற்படும் டிரில்லியன் டிகிரிக்கும் மேற்பட்ட வெப்பத்தைக் கட்டுப்படுத்த ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவை மைனஸ் 271.3 டிகிரி குளிரில் வைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகளில்தான் இந்திய நேரப்படி 20.09.2008 மதியம் 2.57 மணிக்கு கோளாறு ஏற்பட்டுள்ளது. குளிரூட்டும் கருவி ஒன்றில் இருந்து ஒரு டன்னிற்கும் மேற்பட்ட திரவ நிலையிலான ஹீலியம் வாயு கசிந்துள்ளது.
இதையடுத்து தீ பிடிக்கும் அபாயம் ஏற்பட்டதால் தீயணைப்புக் கருவிகள் வரவழைக்கப்பட்டன. பிங் பேங் சோதனை முயற்சிகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டன.
கோளாறு ஏற்பட்டுள்ள கருவிகளை பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பிட்ட கருவியை சாதாரண வெப்ப நிலைக்குக் கொண்டுவந்த பிறகே கோளாறைச் சரிசெய்ய முடியும் என்றும் அதற்கு சுமார் 2 மாதங்கள் ஆகலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, பிங் பேங் சோதனையின் முதல்கட்டம் வெற்றிபெற்றதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் கடிகாரச் சுற்றுப் பாதையில் புரோட்டான்கள் செலுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.