இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இன்று பிரதமர் அளித்துள்ள வாக்குறுதியில் புதிதாக ஒன்றுமில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகள் கூறியுள்ளனர்.
அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவோம் என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் வாக்குறுதி குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “பிரதமரின் வாக்குறுதியில் புதிதாக ஒன்றுமில்லை. ஆனால், எங்கள் அரசியல் தலைமைக் குழுவின் நிலைப்பாடு மிகத் தெளிவானது” என்றார்.
முன்னதாக, புது டெல்லியில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுக் கூட்டத்தில், அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமானால் அரசிற்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், “இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துதற்கு முன் பன்னாட்டு அணு சக்தி முகமையுடனும், அணு சக்தி வணிகக் குழுவுடன் பேச்சு நடத்தி இறுதி முடிவு எடுக்க அரசை அனுமதிக்க வேண்டும். அது முடிந்த பிறகு நாடாளுமன்றத்திற்கு கொண்டுவருவேன். அப்போது நாடாளுமன்றம் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவோம்” என்றார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி கூறுகையில், “இடதுசாரிகளின் நிலைப்பாட்டில் புதிதாக ஒன்றுமில்லை என்று பிரதமர் சொல்லியிருக்கிறார். பிரதமரின் நிலைப்பாட்டில் புதிதாக எந்த மாற்றமும் இல்லை என்கிறோம் நாங்கள்.” என்றார்.
பிரதமர் சொல்லியடி அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முடிக்க நேரமிருக்கும், ஆனால், பின்னர் நாடாளுமன்றத்திற்கு வரும்போது அவ்வொப்பந்தத்தை நிறுத்துவது மிகக் கடினமாகிவிடும். அப்போது உலகமே இந்த ஒப்பந்தத்திற்குச் சாதகமாக உள்ளது என்று அவர்கள் (அரசு) சொல்வார்கள் என்றார் யச்சூரி.