இந்திய மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினரின் தொடர் தாக்குதல்களை தடுத்து நிறுத்தாவிட்டால் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கூட்டமையின் பொதுச் செயலாளர் போஸ் கூறுகையில், தமிழகம், புதுவை உள்பட இந்திய மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதை தடுக்க இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மீனவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
அதுமட்டுமின்றி ராமேஸ்வரம் பகுதியில் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பிற நாட்டு கடல் எல்லையில் சென்றுவிட்டாலும் கூட, மீனவர்களை சுடுவதற்கு எந்த நாடும் அனுமதிக்கவில்லை. ஆனால், சிறிலங்கா கடற்படையினர் அப்பாவி தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.
இதை கண்டித்து விரைவில் பாம்பனில் ரயில் மறியல் செய்யவும், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளோம். இதில், அனைத்து மீனவர்களும் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொள்வோம். எங்களது பிரச்சனையை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்ல இதை தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று அவர் கூறினார்.