கானத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் தொழிலாளி தீக்குளித்து இறந்தது தொடர்பாக கானத்தூர் எஸ்ஐ, ஏட்டு ஆகியோரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார்.
சென்னை அடுத்த கானத்தூர் அப்துல் கலாம் 3வது தெருவை சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவரது வீட்டில் கடந்த 7ம் தேதி பனையூரை சேர்ந்த ஹுமாயூன் (46), சவுகத் அலி ஆகியோர் கொசு வலை அடித்தனர். வேலை முடிந்து சென்ற பிறகு, ‘வீட்டில் இருந்த கம்மலை காணவில்லைÕஎன பெருமாள்சாமியிடம் அவரது மனைவி கீதா கூறியுள்ளார். உடனே ஹுமாயூனை அழைத்து விசாரித்தபோது, ‘கம்மலை எடுக்கவில்லை’ என்று அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து கானத்தூர் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்யப்பட்டது. ஹுமாயூன், சவுகத் அலியை அழைத்து போலீசார் விசாரித்தனர். ‘எங்களுக்கு கம்மலை பற்றி தெரியாது, நாங்கள் எடுக்கவில்லை’ என்று இருவரும் உறுதியாக கூறியுள்ளனர். சவுகத் அலியை மட்டும் விடுவித்த போலீசார், ஹுமாயூனிடம் தொடர்ந்து விசாரித்தனர்.
நள்ளிரவு 12 மணியளவில் ஹுமாயூன் தீக்குளித்து விட்டதாகவும், அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் மனைவி யாஸ்மினுக்கு போன் செய்து போலீசார் தெரிவித்தனர். பதற்றத்துடன், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை பார்த்தார் யாஸ்மின். ஹுமாயூன் இறந்து விட்டது தெரிந்தது. இந்த தகவல் பரவியதும் தமுமுகவினரும், பொதுமக்களும் கானத்தூர் காவல் நிலையம் முன்பு திரண்டு, ‘இது திட்டமிட்ட கொலை’ என கூறி கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் குறித்து விசாரணை நடத்த தாம்பரம் மாஜிஸ்திரேட் ஜீவானந்தம், நேற்றிரவு 7 மணிக்கு கானத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். தற்கொலை செய்து கொண்ட இடத்தை அவர் பார்வையிட்டார். பின்னர், போலீசாரிடம் விசாரணை நடத்தினார். 9.30 மணி வரை இந்த விசாரணை நடந்தது.
இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன், அடையாறு துணை கமிஷனர் சுதாகர், உதவி கமிஷனர் உமாசங்கர் ஆகியோர் ஸ்டேஷனுக்கு வந்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, ஹுமாயூன் போலீஸ் நிலையத்தில் இருந்த போது கவனக்குறைவாக செயல்பட்டதாக எஸ்.ஐ. ராஜா, ஏட்டு லட்சுமணன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் திரிபாதி இன்று உத்தரவிட்டார்.
தீக்குளித்துத் தற்கொலை செய்து கொள்கின்ற அளவிற்கு காவல்துறையும் சமூகமும் அந்த மனிதன் மீது ஒடுக்குமுறையைப் பிரயோகித்துள்ளன
I cannot believe that people are still doing it in 2012.