ஐரோப்பிய நாடுகளில் உச்சமடையும் பொருளாதார நெருக்கடி இதுவரை சமூக நலத் திட்டங்களை அனுபவித்துவந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. பெருந்திரளான மக்கள் நாளாந்த உணவிற்கே அல்லல்படும் நிலை உருவாகியுள்ளது. இதன் மறுபக்கத்தில் பெரு நிறுவனங்களின் இலாபம் பலமடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக சில்லறை வணிகத்தை கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கும் பல்பொருள் அங்காடிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பல மடங்கு இலாபத்தை ஈட்டிவருகின்றன. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று மக்கள் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.
மரினாலெடா என்ற நகரத்தின் முதல்வர் ஜூவான் மனுவல் சன்சேஸ் கோர்லிடொ தொழிலாளர்கள் பலரை அழைத்துக்கொண்டு பல்பொருள் அங்காடி ஒன்றில் நுளைந்து அத்தியாவசிய உணவுப்பொருட்களை பணம் செலுத்தாமல் எடுத்து பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்குப் பகிர்ந்தளித்துள்ளார்.
மரினாலெடா நகரத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் கிடையாது. அனைவரும் தமது தேவைக்கேற்ப உழைக்கிறார்கள். இந்த நகரத்தில் மாத வீடு ஒன்றின் வாடகை 15 யூரோக்கள் மட்டுமே. ஓகஸ்ட் மாதம் 16ம் திகதி தனது பிரதேசத்திலுள்ள ஏனைய நகரங்களுக்கு நடைப்பயணம் மேற்கொண்ட நகர முதல்வர், பணி நீக்கங்களை நிறுத்தவும், அரச வரவுசெலவுத்திட்ட சிக்கனக் கோரிக்கைகளைப் புறக்கணிக்கவும், வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்படுவதைத் தடுக்கவும், ஏனைய நகர முதல்வர்களைக் கேட்டுக்கொண்டார்.
மூவாயிரம் வரையான மக்கள் தொகையைக் கொண்ட இந்தச் சிறிய நகரவாசிகள் கூட்டு உழைப்பில் ஈடுபடுகிறார்கள். கம்யூனிச நகரம் என்று அழைக்கப்படும் இந்த நகரத்தின் 25 சதுர கிலோமீட்டர் நிலத்தையும் தனியாரிடமிருந்து கைப்பற்றிய மக்கள் இப்போது பொதுச் சொத்தாக்கியுள்ளனர். கோர்டிலோ கடந்த 30 வருடமாக இந்த நகரத்தின் மேயராக இருந்துவருகிறார்.
நகரத்தில் பொலீஸ் படை இல்லை. குற்றச் செயல்கள் இல்லை. நகரத்தின் அழகான வெள்ளைச் சுவர்களில் புரட்சிகர சுலோகங்கள் அந்த நகரத்திற்குச் செல்வோரை வரவேற்கும். தெருக்கள் அனைத்தும் லத்தீன் அமரிக்கப் புரட்சியாளார்களின் பெயர்களிலேயே காணப்படுகின்றன. மாதத்தில் சில ஞாயிற்றுக்கிழமைகளை சிவப்பு ஞாயிறாக நகரசபை அறிவிக்கும். அந்த நாட்களில் நகரத்தின் தொண்டர்கள் நகரத்தைச் சுத்திகரிப்பது உட்பட வேறு பணிகளில் ஈடுபடுவார்கள்.
மூவாயிரம் ஏக்கர் கூட்டுப்பண்ணை உற்பத்தியே நகரத்தின் பிரதான வருவாய். அங்குள்ள மக்கள் இந்தக் கூட்டுப்பண்ணையிலேயே வேலைசெய்கிறார்கள்.
15 யூரோக்களை நகரசபைக்கு மாதவாடகையாக்ச் செலுத்தும் குடியிருப்பாளர்களுக்கு சில காலங்களில் வீடு உரித்தாகிவிடுகிறது.
பலவருடங்களாக ஊடகங்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருந்த இந்த சோசலிச நகரம், கடந்த வருடம் பலரலும் பேசப்பட்ட்டது. ஸ்பெயினின் தேசியச் செய்திகளில் இடம்பிடித்துக்கொண்டது. ஸ்பெயினின் மிகப்பிரதான பிரச்சனைகளுள் ஒன்றாக வீட்டு வாடகை மற்றும் வீட்டுக்கடன் பிரச்சனை உருவானபோது, மரினாலெடாவில் 15 யூரோவிற்கு வீடொ ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றதும் ஏனைய பகுதிகளின் பார்வை அங்கு திரும்பியது. அங்கு நிலவும் கூட்டு உழைப்பு, கூட்டுப்பண்ணை உற்பத்தி, மக்கள் அதிகாரம் என்பன குறித்தும் அந்த மக்களின் போராட்ட உணர்வு குறித்தும் ஏனைய பகுதி மக்கள் பார்க்கத் தொடங்கியுள்ளார்கள்.
உலகத் தொழிலார்களுக்ககாகவும் ஒடுக்கொமுறைக்கு எதிராகவும் குரல்கொடுக்கும் மிகப்பெரும் பலமாக மரினெலாட திகழும் என எதிர்ப்பார்க்கபடுகின்றது.
ஐரோப்பிய நாடுகளில் வாழும் புலம் பெயர் ஈழத்தமிழ் மாபியக் குழுக்கள் தம்மைச் சுற்றியுள்ள பிரச்சனைகளுக்காக குறைந்தபட்சம் தொழிற்சங்கப் போராட்டங்களில் கூட ஈடுபடுவதில்லை. ஐரோப்பாவில் இருந்து ரொக்கட் லோஞ்சர் அடித்து ஈழத் தமிழர்களுக்கு தீர்வை முன்வைக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் மரிலெனாடா மக்கள் நாளைய உலகின் இன்றைய நம்பிக்கை.
This is indeed interesting. Then I think they may also need Third Party Mediation to resolve their long standing problems with the Basque community.