இந்தியாவின் மத்திய கண்காணிப்பு ஆணையாளராக பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பாக வைகோ இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருக்கின்ற தி.மு.கழகத்தைச் சேர்ந்த ராசா நிர்வாகத்தில் அலைவரிசை ஒதுக்கீட்டில் மிகப் பெரிய ஊழல் நடந்தது. பெயரளவுக்குப் பதிவு செய்யப்பட்ட ‘ஸ்வான், யூனிடெக்’ என்ற இரண்டு கம்பெனிகளுக்கு அலைவரிசை லைசென்ஸ் தரப்பட்டு, அந்தப் பினாமிக் கம்பெனிகள் பல ஆயிரம் கோடி ரூபாய் லாபத்திற்கு லைசென்ஸை விற்று விட்டன. ஏறத்தாழ ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்து உள்ளது. இந்த விவகாரம் வெடித்தபோது, மத்தியத் தொலைத் தொடர்புத் துறையின் செயலராகப் பணியாற்றியவர் பி.ஜே. தாமஸ். இந்த அலைவரிசை ஒதுக்கீடு குறித்து மத்திய கண்காணிப்பு ஆணையாளரோ, மத்திய தலைமை தணிக்கை அதிகாரியோ தலையிட முடியாது என்று, மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு எழுதி அனுப்பியவரும் இந்த பி.ஜெ. தாமஸ்தான். ஆனால், மன்மோகன் சிங் அரசு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில், பி.ஜெ. தாமஸையே மத்திய கண்காணிப்பு ஆணையாளராக நியமனம் செய்து உள்ளது. ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை மூடி மறைத்து, உண்மைக் குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க ஏற்கனவே நடைபெற்று வரும் முயற்சிகளில் தற்போதைய இந்த நியமனமும் முக்கிய இடத்தைப் பெற்று உள்ளது. ஊழல் குற்றவாளிகளைத் தப்புவிக்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது என்பது தெளிவாகி விட்டது. தற்போது ஊழல் குற்றச்சாட்டின் சந்தேக முள், முழுமையாக மத்திய அரசின் மீது பாய்வதால், இந்த ஊழலின் பயனாளிகள் யார் என்ற கேள்வியும் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. இவ்வளவு பெரிய ஊழல் குற்றச்சாட்டில் உண்மையைக் கண்டறிய விடாமல், மத்திய கண்காணிப்பு ஆணையத்தையே தலையிடக்கூடாது என்று சொன்னவரையே, அந்த ஆணையராக நியமனம் செய்து உள்ள மத்திய அரசு, அந்த நியமனத்தை உடனடியாக ரத்து செய்து, பி.ஜெ. தாமஸை அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.