2- g எனப்படும் இரண்டாம் அலைவரிசை ஒதுக்க்கீட்டில் திமுகவின் மத்திய அமைச்சர் அ.ராசா மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்திருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. ஆதாரபூர்வமான சில விஷயங்களையும் எதிர்க்கட்சிகள் எழுப்பினர் அப்படி எழுப்பிய போதும் இந்தியப் பிரதமர் மன்மோகன் ராசாவை பாதுகாத்தே வந்தார். இந்நிலையில் இரண்டாம் அலைவரிசை அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடந்தது தொடர்பான குற்றச்சாட்டில் அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிரான ஆதாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி வெளியிட்டார். இந்த விவகாரத்தில் அரசுக்கு ரூ.1.9 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குற்றம்சாட்டினார். 2-ஜி ஏல நடைமுறைகளில் நிலவிய முரண்பாடு தொடர்பாக தொலைத் தொடர்புத் துறைக்கு மூத்த தணிக்கை அதிகாரி ராஜேந்திர குமார் விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸின் நகல்களை புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போது செய்தியாளர்களிடம் அவர் வழங்கினார்.இது தொடர்பான விசாரணை முடியும்வரையிலாவது அமைச்சர் ஆ.ராசாவை அமைச்சரவையில் இருந்து மன்மோகன் சிங் விலக்கி வைக்க வேண்டும் எனவும் யெச்சூரி வலியுறுத்தினார்.