90- களுக்குப் பின்னர் அப்போதைய ஜெயலலிதா அரசால் கொண்டு வரப்பட்டது ஸ்டெர்லைட் ஆலை. அப்போது தூத்துக்குடி மக்கள் இதன் பாதகத்தை உணரவில்லை என்ற போதும் பின்னர் பல கட்டப் போராட்டங்களை நடத்தினார்கள். ஸ்டெர்லைட் நிர்வாகம் மக்கள் ஒன்றிணையக் கூடாது என்பதற்காக சாதி மத மோதல்களை தூத்துக்குடியில் உருவாக்கியது. ஆனால், சாதி மதங்களைக் கடந்து தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
2018-ஆம் ஆண்டு நூறு நாள் போராட்டத்தின் முடிவில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதும் அந்த வழக்கில் எவரும் இதுவரை கைதும் செய்யப்படாத நிலையில் போராடிய மக்கள் இன்று வரை வழக்கு கோர்ட் கேஸ் என அலைகிறார்கள். அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளைக் கூட வாபஸ் பெறாமல் ஆக்சிஜனைக் காரணம் காட்டி ஸ்டெர்லைட் திறக்கப்படுவதை தூத்துக்குடியின் பெரும்பான்மை மக்கள் விரும்பவில்லை.
அவர்கள் 17 வயதே நிரம்பிய ஸ்னோலின் சுடப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வை இன்னும் மறக்கவில்லை. ஆக்சிஜனுக்காக ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படவில்லை என்பதை ஒவ்வொருவரும் புரிந்திருக்கும் நிலையில் தமிழக அரசும், தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஸ்டெர்லைட்டை திறக்க சம்மதம் தெரிவித்திருப்பது ஸ்னோலினை மீண்டும் ஒரு முறை கொல்வதற்கு சமம் என்பதான எண்ணமே மக்களிடம் உள்ளது.