பீமா கொரேகான் சதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினராகிய எங்களுக்கு அருட்தந்தை ஸ்டேன் ஸ்வாமியின் உயிரழப்பு அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் தந்துள்ளது. இது பொதுவான ஒரு மரணமல்ல; மாறாக ஒரு மென்மையான மனிதரை மனிதத்தன்மையற்ற அரசு நிறுவனக் கொலை செய்துள்ளது. ஜார்கண்டின் ஆதிவாசிகள் மத்தியில் வாழ்ந்து, அவர்களின் நிலம் மற்றும் அதன் வளங்களை பாதுகாக்கப் போராடிய அருட்தந்தை ஸ்டேன் சாமி, தனது நேச பூமியான ஜார்கண்டிலிருந்து மிக தூரமாக, பழிவாங்கு உணர்வுள்ள ஓர் அரசின் கரங்களில் மரணிக்க வேண்டியவரில்லை.
பீமா கொரேகான் வழக்கில் தவறாக இணைக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டவர்களில் அருட்தந்தை ஸ்டேன் மிகவும் கடைசி. அதே நேரம் 84 வயதில், உடல் நடுக்கவாத நோயால் அவதிப்பட்ட ஸ்டேன் தான் கைது செய்யப்பட்டவர்களில் மூத்தவரும், பலகீனருமாவர். உடல் தான் பலகீனமே தவிர ஒவ்வொருவரையும் தனது மன வலிமையாலும், உறுதி குலையாத நேர்மையாலும் ஊக்கமளித்தார். உடல் நலிவுற்ற போதிலும் அவருடைய எண்ணங்களும், பிரார்த்தனைகளும் சிறையில் வாடிய மற்றவர்களுக்காகவே இருந்துள்ளது. அவர் கடிதங்களில் பொய்க் குற்றச்சாட்டுகளாலும், அநீதியான முறையாலும் தளைப்படுத்தப்பட்ட மற்ற கைதிகளை பற்றியே சிந்தித்துள்ளார்.
அவருடைய சாந்த குணம், மனிதநேயம் மற்றும் இரக்க உணர்வை பற்றி நினைத்துக் கொள்ளும் அதே வேளை அவரை சிறைப்படுத்தி இழைத்த பெரு அநீதியை மறக்க முடியாது. அவரை போன்ற வயது முதிர்ந்த மற்றும் வியாதிகள் மிகுந்த ஒருவரை முதலில் சிறையிலடைத்ததே கொடுமை. அதுவும் பெருந்தொற்று காலத்தில் அவரை சிறைப் படுத்தியது மனசாட்சியற்ற செயல்பாடு. அவர் மீதான வழக்கு விசாரணை அவர் கைது செய்யப்பட்ட அக்டோபர் 8, 2020– ஆம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்து விட்ட ஒன்று தான். தப்பித்து ஒடுபவர் இல்லை என்று தெரிந்தும் அவரை கைது செய்த முறை மற்றும் நவி மும்பையின் தலுஜா சிறையில் சிறைப்படுத்தியது ஆகியவை அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தான்.
கைது செய்யப்பட்ட நேரத்தில் அருட்தந்தை ஸ்டேன் பார்ப்பவரை நெகிழ வைக்கும் ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார். அதில் மென்மையான குரலில், மிக அழுத்தமாக அவர் தெரிவித்தது என்னவென்றால், தேசியப் புலனாய்வு முகாமையின் அதிகாரிகள் அவருக்கு மாவோயிசத் தொடர்பு இருப்பதாக சில ஆவணங்களை அவருடைய கணிப்பொறியிலிருந்து கைப்பற்றப்பட்டு இருப்பதாக கூறிய எதையும் தான் முன்பு பார்த்ததே இல்லை எனவும், கணிப்பொறியில் அவற்றை தான் வைக்கவே இல்லை எனவும் கூறியுள்ளார்.
இந்த ஆவணங்கள் ரகசியமாக ஊன்றப்பட்டது என்பதை ஆர்சனல் கன்சல்டிங் என்ற கணினி தடயவியல் நிறுவனம் மற்றும் வாசிங்டன் போஸ்ட் ஆகியவை இந்த வருடத்தின் தொடக்கத்தில் அம்பலப்படுத்தியுள்ளன. அது தூர இடத்திலிருந்தே ஒரு தீய வலைப்பொருள் உதவியுடன் பீமா கொரேகன் பற்றிய முக்கிய ஆவணங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கணினியில் செலுத்தப்பட்டதை கண்டறிந்துள்ளார்கள். இந்த வகையில் அமைந்த ஒரு பொய்யான சான்று புனைவு தான் அருட்தந்தை ஸ்டேனின் உயிரை பறித்திருக்கிறது.
அருட்தந்தை ஸ்டேனின் உடல்நலம் குறித்த அலட்சியம் அவர் கைதுக்கு பின்பு தொடர்ந்துள்ளது. அது அவருக்கு மிகவும் அத்தியாவசமான நீர்குழாய் மற்றும் உறிஞ்சு கோப்பை ஆகியவை மறுக்கப்பட்டதில் வெளிப்பட்டது. இவை போன்ற மிக அடிப்படையான தேவைகளுக்கு கூட நீதிமன்றத்தை நாடுமளவுக்கு மந்தகதியில் தான் நடந்துள்ளது. பின்னர் அவர் உடல்நிலை மிக மோசமடைந்த போதும் அவரது மருத்துவக் கோரிக்கைப் பிணை எந்திரகதியில் அதே குருட்டு மற்றும் உணர்ச்சியற்ற கொடிய மனம் படைத்த தேசியப் புலனாய்வு முகாமையின் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
கொரோனா நோய்த் தொற்று அவருக்கு இருந்தது கூட சிறையில் கண்டுபிடிக்கப்படவில்லை. உயர்நீதிமன்ற ஆணையை அடுத்து மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட பிறகே கொரோனா தொற்று அவருக்கு இருந்தது தெரிய வந்தது.
தனது உடல்நலம் மோசமடைந்து வருவது குறித்த நெஞ்சை அறுக்கும் ஒரு காணொளியை உயர் நீதிமன்றத்தில் மருத்துவப் பிணைக்கான விசாரணையின் போது வெளியிட்டதை நாம் மறக்க முடியாது. நீதிமன்றத்தில் தான் அதிக நாள் உயிர் வாழப் போவதில்லை என்றும் ராஞ்சியின் பகாய்ச்சாவில் சாக விரும்புவதாகவும் முறையிட்டார். இந்த ஒரு சிறிய விண்ணப்பம் கூட நமது நீதித் துறையால் நிறைவேற்ற முடியாதது திடுக்கிட செய்துள்ளது.
அருட்தந்தை ஸ்டேன் சுவாமிக்கு இரங்கல் தெரிவிக்கும் அதே நேரம் அவருடைய மோசமான மரணத்துக்கு காரணமான அலட்சியச் சிறைகள், பொறுப்பற்ற நீதிமன்றங்கள் மற்றும் தீங்கான புலனாய்வு நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது பொறுப்பை ஊன்றும் கடமையை செய்ய நாம் முன்வர வேண்டும். எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சகாக்களின் உடல்நலம் மற்றும் உயிர் குறித்தும் அஞ்சுகிறோம். அவர்களும் ஸ்டேன் பாதிரியாரை போன்று அநீதியானவற்றை அதே பொறுப்பற்ற நீதி அமைப்பில் அனுபவிப்பவர்கள் தான். சிறைப்பட்டிருக்கும் ஒவ்வொருவரின் பாதுகாப்பையும், உடல் நலத்தையும் தொடர்ந்து கண்காணிப்போம். அருட்தந்தை ஸ்டேனின் சொற்களில், ‘நாம் மவுன சாட்சிகளாக இருக்க மறுப்போம், அதற்கு கிடைக்கும் விலையை பெறவும் தயாராவோம்.’
ஒப்பமிட்டவர்கள்:
மினல் காட்லிங், ராய் வில்சன், மொனாலி ராவுத், கோயல் சென், ஹர்சாலி போத்தார், சரத் கெய்க்வாட், மாய்சா சிங், ஃபெரைரா, சூசன் ஆபிரகாம், ஹேமலதா, சபா உசைன், ரமா டெல்டும்படே ஜென்னி ரொவீனா, சுரேகா கோர்க், பிரனாலி பரப், ருபாலி ஜாதவ், அருட்தந்தை ஜோ சேவியர்.
தமிழில், ராஜ்.