ஸ்காட்லாந்து யார்ட போலீஸின் தலைவர் சர் இயான் பிளேர் இனவெறியுடன் நடந்து கொள்வதாக ஆசியாவை பூர்வீகமாக கொண்ட இங்கிலாந்து காவல்துறை அதிகாரி தாரிக் கஃபூர் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக வழக்கு தொடரப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்..
ஸ்காட்லாந்து போலீஸில் உதவி ஆணையராக இருப்பவர் தாரிக் கஃபூர். உகாண்டாவை பூர்வீமாகக் கொண்டவர். தன்னை ஸ்காட்லந்து போலீஸ் தலைவர் பாரபட்சத்துடனும், இனவெறியுடனும் நடத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
2012ம் ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டங்களுக்கு தன்னை அழைக்காமல் புறக்கணித்து விட்டதாக அவர் கூறியுள்ளார். இதற்கு ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் தலைவர் சர் இயான் பிளேர்தான் காரணம் எனவும் அவர் குற்றண் சாட்டியுள்ளார்.
2 ஆண்டுகளுக்கு முன்பே பிளேருக்கம், கஃபூருக்கும் இடையே மோதல் மூண்டு விட்டதாக கூறப்படுகிறது. கஃபூரை வேண்டும் என்றே முக்கியத்துவம் இல்லாத பணிகளில் பிளேர் நியமித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில்தான் ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட ஷபீர் ஹூசேன் என்ற அதிகாரியும், பிளேர் தன்னிடம் இனவெறி அணுகுமுறையைக் கையாளுவததாக குற்றம் சாட்டியிருந்தார். ஆசியர்களையும், பிற சிறுபான்மையினரையும் அவர் புறக்கணிப்பதாகவும், தனக்கு ஜால்ரா போடுபவர்களை மட்டுமே பக்கத்தில் வைத்துக் கொள்வதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்னொரு மூத்த அதிகாரியும் பிளேர் மீது குற்றம் சாட்டியிருப்பது இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஃபூரின் குற்றச்சாட்டுக்கு, தேசிய கருப்பர் இன போலீஸ் அதிகாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. விரைவில் பிளேருக்கு எதிராக கஃபூர் வழக்கு தொடரவிருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.