ஈழ மக்களின் அவலத்தை முன்வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் வை.கோபாலசாமி பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அன்புமணி ரமதாசும் அவரைச் சந்தித்துள்ளார்.
காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், டாக்டர் ராமதாஸை நேரில் சந்தித்து பேசினார். அதன்பிறகு, பா.ஜ தேசிய செயலாளர் முரளிதர் ராவ், மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர், ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாசை தொடர்பு கொண்டு பேசினர்.இந்நிலையில், டெல்லிக்கு நேற்று முன்தினம் அன்புமணி ராமதாஸ் சென்று ராஜ்நாத்சிங் மற்றும் பா.ஜ மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார்.
ராஜபக்சவை இனப்படுகொலை நடத்திய காரணத்திற்காக வெறுப்பதகக் கூறும் இந்த இரண்டு தலைவர்களும், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இனப்படுகொலையை முன்னின்று நடத்திய நரந்திர மோடியை ஆதரிக்கும் அவமானம் வெறுக்கத்தக்கது.
உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா, பிகார், கேரளம், வங்காளம் போன்ற மாநிலங்களில் மோடி கூட்ட்மைத்துக்கொள்வதற்கு எந்தக் கட்சிகளும் உடன்படப்போவதில்லை. அந்த அளவிற்காவது அங்கு மக்கள் அரசியல் விழிப்புணர்ச்சி பெற்றவர்களாகக் காணப்படுகின்றனர்.
இந்தியாவிலும் புலம் பெயர் நாடுகளிலும் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் மையம் கொண்டுள்ளதாகக் கூறும் இவர்கள் அப்போராட்டத்தைச் சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். ஆதிக்க சாதிக் கட்சிகளின் அடையாளத்தை ஈழப்போராட்டத்திற்கு வழங்கிவரும் இவர்கள், பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட மக்களைத் தனிமைப்படுத்துகின்றனர். இலங்கையில் ஒடுக்கப்படும் முஸ்லிம் மக்களைச் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திலிருந்து அன்னியப்படுத்தும் இவர்கள் ராஜபக்ச அரசைப் பலப்படுத்தும் பிரதான கோட்பாட்டுக் கருவிகளில் ஒன்றாகச் செயற்படுகின்றனர்.
வெறுப்புணர்வு, இனவாதம், ஆதிக்க சாதி வன்மம், மதவெறி போன்றவற்றையே சார்ந்தியங்கும் வை.கோ, ராமதாஸ் போன்ற அழிவு சக்திகளை அன்னியப்படுத்தி, ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஒன்றால் பிரதியிடுவது இன்றைய முதன்மையான கடமைகளில் ஒன்றாகவிருக்கும்.