மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நடந்து வரும் விவசாயிகள் போரட்டம் 6 மாதங்களை எட்டியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் பஞ்சாப், அரியானா, உபி உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடந்த ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி டெல்லியில் மிகப்பெரிய முற்றுகை போராட்டத்தை நடத்தினார்கள். அது வன்முறையில் முடிந்த நிலையில் போராட்டம் துவங்கி ஆறு மாதம் நிறைவடைவதையொட்டி இன்று 26 –ஆம் தேதியை நாடு தழுவிய கருப்பு தினமாக அனுஷ்டிக்க விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.
40 விவசாய அமைப்புகளை ஒருங்கிணைத்து சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற அமைப்பு இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில். தமிழக முதல்வர் ஸ்டாலின் விவசாயச் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். மேலும் விவசாயிகளின் இன்றைய போராட்டத்திற்கு காங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகள் ஆதரவும் தெரிவித்தன.
கருப்பு தினத்தையொட்டி மன்னார்குடி, தஞ்சாவூர், திருச்சி, உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தஞ்சாவூர், திருச்சி மற்றும் மத்திய பிராந்தியத்தில் உள்ள பிற மாவட்டங்களில் உள்ள வீடுகளின் மீது கறுப்புக் கொடிகளை ஏற்றினர். இந்த போராட்டத்தை ஆதரித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ப. சிதம்பரம் “விவசாயிகள் நடத்தும் போராட்டம் 6 மாதங்களை நிறைவடைகிறது. விவசாயிகள் தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்லும் அரசு ஏன் விவசாயச் சட்டங்களை விலக்கிக் கொள்ள மறுக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.