இந்தியாவில் அல்லது தமிழ்நாட்டில் இஸ்லாம் எப்படி உருவானது என்ற வரலாறு பலருக்கும் தெரிவதில்லை. அடையாள பிளவுகளும், தீவு கூட்டங்களும் இந்திய இஸ்லாமிய சமூக அமைப்பிற்குள் உருவாகி இருக்கும் இந்த காலகட்டத்தில் அடையாளங்களுக்கான வேரை தேடுவது அவசியமாகிறது. ஒரு புறம் அந்நியர்கள் என்ற மனோபாவம் மற்றொருபுறம் தன்வயமாதலை நோக்கி நகரும் சமூகம் இவை பன்மய இந்திய சமூக அமைப்பில் மிகப்பெரும் கலாசார மோதலுக்கு காரணமாகின்றன. இந்நிலையில் காலத்தை பின்னுக்கு தள்ளி இந்தியாவில் அல்லது தமிழ்நாட்டில் இஸ்லாம் வேர்கொண்ட வரலாற்று விதத்தை உள்நுழைந்து காண்பது காலம் சார்ந்த தேவை. அதை கோம்பை அன்வரின் யாதும் ஆவணப்படம் பூர்த்தி செய்கிறது எனலாம்.
சுமார் ஒரு மணி நேரம் ஓடும் இந்த ஆவணப்படம் நம்மை வேர்களின் தேடலை நோக்கி எதார்த்த வெளியில் பயணம் செய்ய வைக்கிறது. வரலாறு எங்கு வேர்கொண்டிருக்கிறது என்ற அறிதலுக்காக தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பல பகுதிகளுக்கும் கேமரா நகர்ந்து கொண்டே செல்கிறது. அந்த நகர்ச்சியுடன் பல எதார்த்த அனுபவங்கள் காட்சியாக நம் கண்முன் விரிந்து கொண்டே செல்கிறது.
குறிப்பாக கி.பி ஏழாம் நூற்றாண்டு காலகட்டத்திலிருந்தே கேரளாவிற்கும் அரபு நாடுகளுக்கும் கடல்வழி தொடர்பு இருந்ததை நிறுவ முயற்சிக்கிறது. அதற்கான ஆதாரங்களை, தரவுகளை வணிக கூறுகளின் வழியாக முன்வைக்கிறது. குறிப்பாக நறுமண பொருட்களின் ஏற்றுமதியை இது தொடக்கமாக முன்வைக்கிறது. தேனி மாவட்டத்தை இதற்கான மூலமாக வைக்கிறது. இதன் மூலம் தென்னிந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து அரபு நாடுகளுக்கு வணிக உறவுகள் இருந்ததை குறிப்பிடுகிறது. அன்றைய அரபிகள் தமிழ்நாட்டை மாபர் என்றழைத்தனர்.
ஏழாம் நூற்றாண்டு காலத்தில் கேரளாவில் இஸ்லாம் முதன்முதலில் வேர்கொண்டதை கேரள வரலாற்று ஆய்வாளர்களின் நேர்முகம் மற்றும் பிற தரவுகள் வழி இந்த ஆவணப்படத்தில் நிரூபிக்கிறார் அன்வர். அன்றைய காலகட்டத்தில் கேரளாவுடன் அரபிகளுக்கு இருந்த வணிக தொடர்பு, மற்றும் சமூக தொடர்பு ஆகியவை இதில் காட்சிப்படுகின்றன. இஸ்லாம் இந்தியாவில் அல்லது தென்னிந்தியாவில் பரவிய காலகட்டத்தில் இங்கு ஏற்கனவே நிலவி வந்த பெரும்பான்மை இந்து சமூகத்தின் கலாசார கூறுகளோடு இயைந்தே உருவானது என்பது இந்த ஆவணப்படம் காட்சிப்படுத்தும் மிக முக்கிய நிரூபணம்.
இந்தியாவில் இஸ்லாம் சாதியை தகர்த்து அதே நேரத்தில் உணவு, உடை , கட்டிடக்கலை, சடங்குகள், மொழி போன்றவற்றில் நிலவில் இருந்த சமூக அமைப்பை உள்வாங்கி தன்னை வெளிப்படுத்திய முறை குறித்து இதில் முக்கிய தகவல் இடம்பெறுகிறது. குறிப்பாக இந்து கோயில்களுக்கு முஸ்லிம் மன்னர்கள் நன்கொடை அளித்த விதம், திருவிழாக்களில் பல்சமய பங்கெடுப்பு, தர்கா சார்ந்த சமூக உறவு முறை போன்றவை இதில் இடம்பெறுகின்றன. கேரளாவின் பல முஸ்லிம் பள்ளிவாசல்களின் கட்டிட அமைப்பு கேரள பாரம்பரியத்தை உள்வாங்கிய முறையாக இருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது. கேரளா கலாசாரத்தின் கூறான குத்துவிளக்கு கூட பண்டைய கேரள பள்ளிவாசல்களில் இருப்பதை காட்சி நம்முன் விரிகிறது. அதே நேரத்தில் இன்றைய காலகட்டம் இதிலிருந்து முற்றிலுமாக விலகி முழுவதும் தன்வயப்படுதலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
உலகளாவிய சமூக அபாயமாக உருவாகி இருக்கும் வஹ்ஹாபியம் பன்மய சமூக அமைப்பிற்கு (எந்த தேசமானாலும்)பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. அரபு கலாசாரத்தையே இஸ்லாமிய கலாசாரம் என்று முன்வைக்கும், சவூதியில் மழைபெய்தால் பிற நாட்டு தலைநகரங்களில் குடைபிடிக்கும், சவூதிய குடிமகனுக்கு காய்ச்சல் வந்தால் இங்குள்ளவர்கள் மருந்து சாப்பிட வேண்டும் என்று நிர்பந்திப்பது போன்றவை இதன் முக்கிய அம்சங்கள். யாதும் என்ற ஆவணப்படம் மேற்கண்ட வஹ்ஹாபிய நிலைப்பாட்டை, அம்சங்களை முற்றிலுமாக தகர்க்கிறது. அது வட்டார அடையாளங்களை வேர்களின் அறிதல் முறையோடு முன்வைக்கிறது. அதற்கான பல்வேறு காட்சிப்பதிவுகள் இதில் பதிவாகி இருக்கின்றன.
சைவ சமய வழிபாட்டு முறை, மதுரை கோயில் திருவிழாவில் முஸ்லிம் குடும்பத்தின் பாரம்பரியமான பங்களிப்பு போன்றவை இதன் நிரூபண அம்சங்கள். இதன் காரணமாகவே இந்த ஆவணப்படம் வஹ்ஹாபிய சார்பு கொண்ட முஸ்லிம் அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர்களும் தங்களின் சவூதி சார்ந்த இருப்பிற்கு இந்த ஆவணப்படம் பெரும் ஆபத்தாக மாறி விடும் என்று பதட்டப்படுகிறார்கள். அதனால் இறைவனுக்கு இணைவைப்பு, துணை வைப்பு போன்றவற்றால் இதனை ஒதுக்கி விட்டார்கள். இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இந்துத்துவா போன்றே இந்தியாவில் வஹ்ஹாபியம் வேர்கொள்ள முயற்சிக்கும் நிலையில் அது எல்லாவிதமான கலை இலக்கிய மற்றும் அறிவுச்செல்வங்களுக்கு எதிரானதாக இருக்கிறது. பன்மய கலாசாரங்களை அழித்து விட்டு ஒற்றைமய கலாசாரத்தை முன்வைத்தல், தூய்மைவாதத்தின் பேரில் இயந்திரத்தனமான மத கட்டுமானத்தை நிறுவுதல் போன்றவை தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்த வகையில் யாதும் ஆவணப்படம் அதற்கு எதிராக இருக்கிறது.
சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்களின் படைகளில் முஸ்லிம்கள் இடம்பெற்றது அக்காலத்திய பன்மய சமூக அமைப்புமுறையின் வெளிப்பாடு. இந்த வரலாற்று அமைப்புமுறையை யாதும் சிறந்த முறையில் காட்சிப்படுத்துகிறது. இந்தியாவில் இஸ்லாம் முதன் முதலாக பரவியது தென்னிந்தியாவாக இருக்கும் நிலையில் வட இந்தியாவின் பெரும்பகுதியினர் நாங்கள் தான் இந்திய இஸ்லாத்தின் உண்மையான வாரிசுதாரர்கள் என்கின்றனர். சுல்தான்களும், முகலாயர்களும் எங்களுக்கு முன்னோடி என்கின்றனர். தென்னிந்திய வரலாற்றை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இந்நிலையில் யாதும் ஆவணப்படம் மேற்கண்ட கற்பிதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவின் கடற்கரைகளை வரலாற்று தரவுகளாக குவியப்படுத்துகிறது. அங்கும் இங்குமாக துண்டிக்கப்பட்ட காட்சி பதிவுகள் இந்த படத்தில் வரலாறை மீட்சிப்படுத்துகிறது.
வரலாற்று ஆவணப்படங்கள் வெளிப்படுத்தும் நுட்பத்தை, அதன் துல்லியத்தை, விரிவான காட்சிபடிமத்தை யாதும் என்ற பெயரில் கோம்பை அன்வர் எடுத்திருக்கிறார். தமிழ் வேர்களை தேடும் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இஸ்லாம் எப்படி இங்கு உருவானது என்பதும் முக்கியமானது. எந்த ஒன்றையும் தவிர்த்து விட்டு நாம் வரலாற்றை அணுக முடியாது. அதற்கான சிறந்த தொடக்கம் தான் இந்த யாதும் ஆவணப்படம். எல்லாவிதமான வரலாற்றை அறிந்து கொள்ள முயற்சிப்பவர்கள் இந்த ஆவணப்படத்தை அவசியம் காண வேண்டும். அதன் மூலம் கலாசாரம் என்பது ஒற்றைமயமானது அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம்.
வெளியீடு: மீடியா கோம்பை
மின்னஞ்சல்: contact@yaadhum.com
அலைபேசி: 9444077171
www.yaadhum.com