வரும் வெள்ளிக் கிழமை கூடும் ஐ.நா. பாதுகாப்புப் பேரவையின் இந்தக் கூட்டம் அதிகாரப்பூர்வமற்றதாகவும், கேள்வி பதிலாகவும் நடைபெறும் என்று கூறியுள்ள ஐ.நா. பாதுகாப்புப் பேரவையின் இந்த மாதத்திற்கான தலைமை பொறுப்பை ஏற்றுள்ள துருக்கி நாட்டின் தூதர் பாகி இல்கின் வேறெந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
இலங்கைக்கு தான் மேற்கொண்ட பயணம் குறித்தும், அங்கு தனக்கு தெரிவிக்கப்பட்ட தகவல்கள் குறித்தும், போர் நடந்த பகுதிகள் மீது பறந்து தான் கண்ட காட்சி, இரண்டே முக்கால் இலட்சம் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களின் நிலை ஆகியன பற்றி பாதுகாப்புப் பேரவையில் பான் கீ மூன் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் நடந்த இறுதி கட்டப் போரில் அப்பாவி மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், அங்கு நடந்ததாக கூறப்படும் போர் விதிமுறைகள் மீறல் குறித்தும் பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், பாதிப்பிற்குள்ளான அப்பாவி மக்களின் கதி குறித்து தனக்குக் கிடைத்த தகவலை ஐ.நா. வெளியிட வேண்டும் என்றும் சர்வதேச பொது மன்னிப்பு சபையும், மற்ற மனிதாபிமான தொண்டு நிறுவனங்களும் கோரியுள்ளன.