ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள் என்ற ஒரு டிராபிக் ராமசாமி போராடி போராடியே செத்துப்போனார், ஆனால் சென்னை வாழ் மக்கள் திருந்தவில்லை, அதிகாரிகளும் சூழ்நிலையை கையில் எடுக்கவில்லை!
வருடா வருடம் இதே காட்சி, நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள், வீடுகள், கொஞ்சமாய் கொஞ்சமாய் வளைத்து பிறகு அதற்கும் சேர்த்து பட்டா வாங்கிவிடும் சமார்த்தியம் அல்லது சம்பந்தப்பட்ட துறை ஊழியர்களுக்கு அது இன்னொரு வருமானம் வரும் வழி!
சென்னையில் எந்த சாலையில் நின்று நீங்கள் பார்த்தாலும் சாலை ஒரு நேர்கோடாக இருக்கவே இருக்காது, சர்வே மற்றும் எப்எம்பி படங்களில் ஒருமாதிரியும் நேரில் இன்னொரு மாதிரியும் இருக்கும், ஒரு வீடு பின்னே இருக்கும், இன்னொரு வீடு முன்னே இருக்கும் மற்றுமொரு வீடு இன்னும் முன்னே வந்து இருக்கும், கடைகளும் இப்படித்தான், பெரிய சிறிய கடைகளில் எல்லாம் முதலில் பொருட்களை உள்ளே வைப்பார்கள், கடையின் பெயர் பலகையை வெளியே வைப்பார்கள், பிறகு மெதுவாக பொருட்களை வெளியே வைப்பார்கள், பிறகு நடைபாதை முழுவதையும் ஆக்கிரமிப்பார்கள், யாரும் இதைக்கேட்க மாட்டார்களா என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மாத மாதம் கவனித்துவிடுவோம் என்பார்கள், மைலாப்பூர், புரசைவாக்கம், இராயப்பேட்டை, அம்பத்தூர், அடையார், வியாசர்பாடி என்ற எந்தத் திசையில் சென்றாலும் நீங்கள் இதைக் காணலாம்!
ஸ்மார்ட் சிட்டி என்ற ஒரு விசித்திரம் நடந்தது, நடைபாதையை அகலப்படுத்தி, கடைகள் தங்கள் வாகனங்களையும் வியாபாரத்தையும் விரிவுப்படுத்த வழி ஏற்படுத்தி சாலையில் வாகனங்கள் செல்லும் பாதையை சுருக்கியது தான் நிதர்சனத்தில் ஸ்மார்ட் சிட்டி, சென்னையில் இராமகிருஷ்ண கல்லூரி இருக்கும் இடத்தில் இப்படி நடைபாதையை அகலப்படுத்த மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு தங்கள் வீடுகளையும் கடைகளையும் விஸ்தரித்துக்கொண்டார்கள்!
சென்னையில் நாள்தோறும் நிகழும் ஆக்கிரமிப்புகள், மழைநீர் சேகரிப்பு திட்டம் இல்லாத கட்டிடங்கள், சேரும் குப்பைகள், இன்னமும் மக்கும் மக்காத குப்பைகளை பிரிக்க முடியாத அவலம் எதுவும் அரசுக்கோ சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கோ ஊழியர்களுக்கு தெரியாமல் நடக்கவே நடக்காது, எதெல்லாம் மறைமுக வருமானம் வரும் வழி என்பதை கண்டறிவதில் அமெரிக்க உளவுத்துறைக்கே டப் பைட் கொடுப்பார்கள் சம்பந்தப்பட்ட துறை ஊழியர்கள், ஆட்சி மாறினாலும் இப்படிப்பட்ட அதிகாரிகளும் ஊழியர்களும் மாறாத வரை ஆக்கிரமிப்புகள் தொடர்கதைதான்!
இன்னொரு பக்கம் ஆக்கிரமிப்பு செய்யும் மக்களும் கடுமையான நடவடிக்கை எடுத்தாலொழிய தானாக திருந்த மாட்டார்கள், நடவடிக்கை எடுத்தால் நான் யார் தெரியுமா என்று ஏதோ ஒரு கட்சிப்பெயரை, ஏதாவது துறையில் இருக்கும் சொந்தத்காரரின் பெயரை, என்று முஷ்டி காட்டுவார்கள், இது எதுவுமே இல்லையென்றாலும் கரன்சி பேசும் இதுவும் இல்லையென்றால் நாங்கள் ஏழைகள், இந்த சாதி என்று வேறு முட்டுக்கட்டை தோன்றும், சம்பந்தப்பட்ட சாதி மதக்கட்சிகள் களம் இறங்கும்!
மொத்தத்தில் யாரோ செய்யும் ஆக்கிரமிப்பு திருட்டில் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்படுவதை யாருமே உணர்வதில்லை!
மக்கள், அரசுத்துறைகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் என்ற எல்லோரின் மனநிலையும் மாறி அவரவர் வேலையை மனசாட்சிப்படி சட்டத்தின் படி செய்ய ஆரம்பித்தால் இதுபோன்ற சூழ்நிலை வரவே வராது அதுவரை இந்த ப்ரேக்கிங் நியூஸ் பார்த்து நேரத்தை வீணடிக்காதீர்கள், அடுத்த வருடமும் இதே காட்சிதான் திரும்பவும் வரும்!
சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுக்க ஆக்கிரமிப்புகளை அகற்றினால் உண்மையான நிலப்பரப்பு தெரிய வரும்!
படம்: அம்பத்தூர், இது குளம் இல்லை சாலை!