20.03.2009.
புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் மக்களைப் பார்க்கும் போது அவர்கள் எந்தளவுக்கு துயரப்பட்டுள்ளனரென்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. முல்லைத்தீவில் பட்டினி நிலையுள்ளதாக பொய்ப்பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது. அங்குள்ள மக்களுக்கு மட்டுமன்றி புலிகளுக்கும் நாம் தான் உணவு அனுப்பி வருகின்றோம்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற படையினரின் விதவைகள் மற்றும் குழந்தைகள் ஓய்வூதிய சட்டமூல திருத்த விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, அவர் மேலும் கூறியதாவது;
நாம் முன்னர் இராணுவ வீரர்களின் மரணவீடுகளுக்கு சென்றால் அங்குள்ளவர்கள் எம்மை திட்டுவார்கள். ஆனால், இப்போது மக்கள் தேசப்பற்றுள்ளவர்களாக மாறிவிட்டனர். தாய் நாட்டுக்காக தமது பிள்ளை உயிர்த்தியாகம் செய்ததையிட்டு அவர்கள் பெருமைப்படுகின்றனர்.
இன்று படையினரின் ஓய்வூதியம் தொடர்பான முக்கியமானதொரு சட்டமூலம். ஆனால், பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வின் ஒரு உறுப்பினர் கூட சபையில் இல்லை. இதில் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைக்க வேண்டிய பொறுப்பு ஐ.தே.க.வுக்கு உண்டு. ஆனால், அவர்கள் அதனைச் செய்யவில்லை.
வெளிநாடுகளில் குளிரூட்டி அறைகளில் இருக்கும் சில அதிகாரிகள் இங்குள்ள சிலரின் தவறான தகவல்களை வைத்துக்கொண்டு இலங்கை அரசு மீது குற்றஞ்சாட்டுகின்றனர். இலங்கை இராணுவத்தில் உள்ளவர்கள் ஒழுக்கசீலர்கள். அவர்களை நினைத்து நாடு பெருமையடைகின்றது. நாமும் பெருமையடைகின்றோம்.
அனைத்து மக்களும் சுதந்திரமாக சம உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இதற்கான நடவடிக்கைகளையே அரசு எடுத்து வருகின்றது.
அந்த வகையில் மக்களின் சுதந்திரமான வாழ்க்கைக்காக தம்மை அர்ப்பணித்து செயற்படும் படைவீரர்களுக்கான இந்த ஓய்வூதியத் திட்டம் நாம் அவர்களின் சேவைக்கு செய்யும் பிரதியுபகாரமாகும்.