டிசம்பரில் இருந்தே, வெலிஓயா தோட்டத் தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கும் இலக்கை நாளொன்றுக்கு 17 கிலோவில் இருந்து 20 கிலோவாக அதிகரிப்பதை எதிர்த்து வருகின்ற அதே வேளை, பொகவந்தலாவை தொழிலாளர்கள் தமது இலக்கு 2 கிலோவால் அதிகரிக்கப்படுவதை ஏற்க மறுத்து வருகின்றனர். எவ்வாறெனினும், ஒரு ஆத்திரமூட்டலை மேற்கொண்டுள்ள கம்பனிகள், ஜனவரி மாதத்துக்கான தொழிலாளர்களின் சம்பளத்தை புதிய இலக்குகளுக்கு ஏற்ப தயார் செய்ததன் மூலம் சம்பளத்தை வெட்டியுள்ளன.
செவ்வாய் கிழமை, வட்டவளை பெருந்தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான வெலிஓயா தோட்டத்தின் சுமார் 1,200 தொழிலாளர்களும், பொகவந்தலாவை தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான ஐந்து தோட்டங்களின் சுமார் 4,000 தொழிலாளர்களும், அதிக கொழுந்து பறிக்கும் புதிய வேலை இலக்குகளின் படி கணக்கிடப்பட்ட சம்பளத்தை ஏற்க மறுத்தனர். பொகவந்தலாவை பெருந்தோட்டத்துக்குரிய கொட்டியாகலை, பொகவான, பிரேட்வெல், பொகவந்தலாவை, டின்ட்சின் ஆகிய ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த சம்பள வெட்டை எதிர்த்து வேலை நிறுத்தத்தில் குதித்தனர்.
தோட்டங்களில் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), கம்பனிகளுக்கு ஆதரவாக வெளிஓயா மற்றும் பொகவந்தலாவை தொழிலாளர்களின் கோரிக்கைகளை எதிர்த்துள்ளது. அதன் தலைவர் ஆறுமுகம் தொண்டமான், ஒரு அமைச்சரவை அமைச்சர் மட்டுமன்றி ஒரு தோட்ட உரிமையாளரும் ஆவார்.
ஏனைய தோட்டங்களுக்கும் போராட்டங்கள் பரவக்கூடும் என பீதியடைந்துள்ள தொழிற்சங்கங்கள், கம்பனிகள் கோரும் இலக்குகளை தொழிலாளர்களை ஏற்றுக்கொள்ளச் செய்ய வழி தேடுகின்றன. தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU), இலங்கை தொழிலாளர் முன்னணி (CWA) மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரசும் (ஜ.தொ.கா.), பொகவந்தலாவை பெருந்தோட்ட நிர்வாகத்துடன் நேற்று கலந்துரையாடலுக்குச் சென்ற போதும், கம்பனி எந்தவொரு சமரசத்துக்கும் உடன்படாத நிலையில் அது தோல்வியடைந்தது.
அரச ஆதரவாளர்களான பெரு நிறுவனங்களின் பங்காளிகளான தொழிற்சங்கங்களை நிராகரித்து அரசிற்கு எதிரான போராட்டங்களை இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்தால் அது புதிய சக்தியாக உருவெடுக்கும்.