சூரியனைச் சுடும்
சுதந்திர வேட்கையும்..
வீரமும் கொண்டவர்கள் நீங்கள்..
சுண்டெலியைச் சுடுவதற்காக
சுடு குழல்களோடு அலையாதீர்கள்..
மலைகளைத் தகர்த்து
மடுவோடு இணைக்கும்
மகத்தான ஆற்றல் கொண்டவர்கள் நீங்கள்..
மலைகளைக் குடைந்து
எலிகளைத் தேடியலையாதீர்கள்..
வெற்றி என்பது இப்படித்தான்..
நேற்று வர வேண்டியது நாளைவரை
காத்திருக்கும்…
அரசுத் துறையின்
அலுவலகங்கள் போல…!
அதற்காக செத்துக்கொண்டிருக்கும்
சிங்கத்திடம் அச்சம் தேவையில்லை
நிச்சயமாக நிதானம் மட்டுமே தேவை..
ஒவ்வொரு கதவுகளியும் தட்டுங்கள்..
யேசுநாதர் திறக்காவிட்டாலும்
பேச மறுக்கப்பட்டவன் திறப்பான்..
இணைந்துகொள்ள நேரமெடுக்காது..
உலகம் எங்களுக்கு முன்னால்
உதாரணங்களை விட்டுச் சென்றிருக்கின்றது..
கற்றுக்கொள்ளப் போராடுங்கள்…
போராடக் கற்றுக்கொள்ளுங்கள்..
திரும்பிப் பாருங்கள்..
திருத்தப்படாத பாதையில்
நெருஞ்சி முட்கள் தெரியும்..
புதிய பாதையில்
பூக்களை நட்டுச் செல்வீர்கள்…
மறந்துவிடாதீர்கள்..
வெற்றி இப்படித்தான்..
நேற்று வர வேண்டியது
நாளை தாமதமாக வரும்.
அதற்காக எலி பிடிப்பதற்காக மட்டும்
இணைப்பை ஏற்படுத்தாதீர்கள்..
உங்களுக்காக எதிர்கால சமூகம்
காத்திருக்கிறது…
உங்கள் விளக்குகள்
வியாபாரிகளுக்கு விளம்பரமாககூடாது..
எதிரிகளுக்குத் தீவைக்க வேண்டும்..
அதற்காகக் கதவுகளைத் தட்டுங்கள்.
காத்திருக்கிறார்கள்…
மாதுரி – யாழ்.பல்கலைக்கழகம்
27.112014
நம்பிக்கை ஊட்டும் நல்ல கவிதை!