இந்திய வரலாற்றில் மிக நீண்ட காலமாக நடந்த போராட்டம் என்பதோடு போராடி வெற்றி கண்ட போராட்டமாகவும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் மாறியுள்ளது.
மத்த்யில் ஆளும் மோடி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2020 நவம்பர் 26-ஆம் தேதி டெல்லியில் குவியத்துவங்கிய விவசாயிகள் டெல்லியில் எல்லையோரங்களில் நெடுஞ்சாலைகள் ஓரத்தில் பல கிலோ மீட்டர் தொலைவுகளுக்கு தங்கியிருந்து போராடி வந்தனர்.
பெரும்பலான விவசாயிகள் டிராக்டர்களோடு வந்தனர். அதையே வீடு போல மாற்றி தங்கியிருந்தனர். சிலர் டெண்டுகளை அமைத்து குடும்பம் குடும்பமாக போராட்டங்களில் பங்கேற்றனர். நாடு முழுக்க இருந்து போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்த மக்களுக்கும் அவர்கள் உணவு சமைத்துக் கொடுத்தனர். அந்த வகையில் இந்த போராட்டம் ஒரு முன்னுதாரணப் போராட்டமாக மாறியது. 6 மாதம் போராடும் திட்டத்தோடு வந்த விவசாயிகள் ஒரு மாத காலம் தாக்குப்பிடித்து போரடினார்கள். இதற்காக உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உட்பட பல மாநில விவசாயிகள் தங்களிடம் உள்ள விளைபொருட்களையும் நிலத்தில் அறுவடை செய்யும் பயிர்வகைகளில் ஒரு பகுதியையும் டெல்லி போராட்டக்களத்திற்கு அனுப்பி வைத்தனர்.
டெல்லிக்குச் செல்லும் சாலைகளான சிங்கு, டிக்ரி,காசிப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த இந்த போராட்டம் காரணமாக 700 விவசாயிகள் குளிர்,மழை,கோடை என உடல் நலம் குன்றி இறந்தனர். 18 பேர் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தற்கொலை செய்து கொண்டனர்.
இப்போது வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டிருக்கும் நிலையில், விளைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, வழக்குகள் வாபாஸ் போன்ற உத்திரவாதங்களை ஏற்று போராட்டங்களை முடித்துக் கொண்டனர். இப்போது தாங்கள் போட்டிருந்த கூட்டாரங்களைக் கலைத்து விட்டு வெற்றிக் கழிப்புடன் கொண்டாட்டங்களுடன் ஊர் திரும்பி வருகிறார்கள். இவர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பும் போது ஊர் மக்கள் இவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்புக் கொடுக்கிறார்கள்.