மக்கள் சார்ந்த அரசியலின் இறுதி வேர்களையும் அழிப்பதற்கு அமரிக்க பயங்கரவாத அரசு செயற்படுவதற்கான மற்றொரு ஆதாரத்தை விக்கிலீக்ஸ் கேபிள் ஒன்று தெரிவிக்கிறது. வெனிசூலாவில் பாராளுமன்ற தேர்தல் ஊடாகத் தெரிவான சாவேஸ் அரசை அழிக்கும் நோக்குடன் செயற்படும் குழுக்களுக்கு மேலதிகமான நிதி உதவியைக் கேட்டு கரக்காஸ் இலிருந்து அமரிக்க தூதரகம் அமரிக்க உளவு நிறுவனங்களான CIA,NSA போன்றவற்றைத் தொடர்பு கொண்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை வெனிசூலாவில் சாவேசின் பின்னர் அவரது கட்சியைச் சேர்ந்த நிகொலாஸ் மதுரோ அதிபராகத் தெரிவானது செல்லுபடியற்றது என எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. வெனிசூலா முழுவதும் மக்கள் போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
எதிர்கட்சிகள் மட்டுமன்றி, தனி நபர்கள் பல்வேறு தன்னார்வ நிறுவனங்கள், இளைஞர் குழுக்கள் போன்றன அமரிக்க அரசின் பல்வேறு கூறுகளிடமிருந்து பல மில்லியன்கள் பெறுமதியான பணத்தைப் பெற்றுள்ளன.
ஜெனிவா தீர்மானத்தின் அடிப்படையில் தூதரகங்கள் உள் நாட்டு விவகாரங்களில் நேரடித் தலையீடு மேற்கொள்வது சட்டவிரோதமானதாகும்.
சாவேசின் மரணத்தின் பின்னர் வெனிசூலா இனிமேல் தனது அரசியல் விம்பத்தை மாற்ற வேண்டும் என அமரிக்க அரசு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.