பிரித்தானியா அரசின் பெருந்தேசிய ஒடுக்கு முறையிலிருந்து விடுதலை பெறப் போராடிவந்த அயர்லாந்து குடியரசு இராணுவத்திலிருந்து பிளவுற்ற அமைப்பான புதிய அயர்லாந்து விடுதலை இராணுவம் தனது இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது. பிரித்தானியாவிலுள்ள நான்கு இராணுவ ஆட்சேர்ப்பு மையங்களுக்கு 13.02.2014 அன்று வெடிகுண்டுப் பொதிகள் அனுப்பிவைக்கப்பட்டன. பொதிகளைத் திறந்தால் வெடிகுண்டுகள் வெடிக்கக்கூடிய நிலையிலேயே அவை தயாரிக்கப்பட்டிருந்தன. ஐ.ஆர்.ஏ எனப்படும் அயர்லாந்து விடுதலை அமைப்பிலிருந்து பிரிந்த ஒரு பகுதியினர் பிரித்தானிய அரசுடன் போராடியே உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவித்து 2012 ஆம் ஆண்டில் புதிய அயர்லாந்து குடியரசு இராணுவம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர்.
இக்குழுவே வெடிகுண்டுப் பொதியின் பின்னணியில் செயற்பட்டிருக்கலாம் என்று பிரித்தானிய உளவுத்துறை அறிவித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான பிரித்தானிய அரசின் உளவுப் பிரிவி இதனை அறிவித்துள்ளது.
இதே வகையான தொழில் நுட்பத்தைக் கொண்ட குண்டுப் பொதிகள் கடந்த வருடம் வட அயர்லாந்து தலைமை பொலிஸ் அதிகாரி மத் பகொட்என்பவருக்கும், அயர்லாந்துக்கான ராஜங்க செயலாளர் தெரேசா வில்லியர்சுக்கும் அனுப்பிவைக்கப்பட்டன.
வட அயர்லாந்தில் பல்வேறு குழுக்கள் இயங்கிவருவதாகவும் ‘புதிய ஐ.ஆர்.ஏ’ அவற்றுள் கணிசமான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய குழுவாகவும் கருதப்படுகிறது. தேசிய இனங்கள், தேசிய இனப்பிரச்சனை போன்றவை குறித்து எந்த அறிவுமற்றிருந்த உலகில், அயர்லாந்து மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை நிபந்தனையின்றி ஆதரித்தவர் கார்ல் மார்க்ஸ். அயர்லாந்து மக்கள் விடுதலை பெற்றாலே பிரித்தானியத் தொழிலாளர்கள் தம்மீதான ஒடுக்குமுறையை உணர்ந்துகொள்வார்கள் என்று வெளிப்படையாகக் கார்ல் மார்க்ஸ் 150 வடுடங்களின் முன்னர் அறிவித்தார்.
மிக நீண்ட வருடங்களாக நடத்தப்பட்ட ஐயர்லாந்து விடுதலைப் போராட்டம் மக்களை ஒழுங்கமைத்த ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையிலான போராட்டமாகவன்றி வெறும் இராணுவ நடவடிக்கைகளையே தனது அரசியல் செயற்பாடாகக் கொண்டிருந்தது. இதனால் போராட்டம் அடுத்த நிலையை நோக்கி வளர்ச்சியடையாத தேக்க நிலையிலேயே நீண்டகாலமாகக் காணப்பட்டது. இறுதியில் அயர்லாந்து குடியரசு இராணுவத்தின் தலைவர்கள் பிரித்தானிய அதிகாரத்துடன் சமரசத்திற்கு வந்தனர்.
எது எவ்வாறாயினும் ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடும் புதிய அமைப்புக்கள் தோன்றின. ஆங்கிலம் பேசுபவர்களான அயர்லாந்து மக்கள், கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட தேசிய சந்தையைக் கொண்டவர்கள். இவற்றிற்கு எதிரான பிரித்தானிய மேலாதிக்கம் இன்றும் தொடர்கிறது.
இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் மீதான இராணுவ ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய விடுதலை இயக்கங்கள் ஏகாதிபத்தியங்களதும் இந்தியாவினதும் சதியால் முற்றாக அழிக்கப்பட்டன. இறுதியாக இராணுவ வளத்தைக் கொண்டிருந்த புலிகளும் அழிக்கப்பட்டனர். இலங்கையில் தேசிய இன ஒடுக்குமுறையும் முன்னெப்போதையும் விட திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு இனவழிப்பு என்ற நிலைக்கு வளர்ச்சியடைந்துள்ள நிலையில், அதற்கு எதிரான போராட்டங்களும் அயர்லாந்தைப் போன்றே தவிர்க்க முடியாத நிலைக்கு வளர்ச்சியடையும் நிலையில் காணப்படுகின்றன.
இலங்கை பேரினவாதப் பாசிச அரசின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மீண்டும் தோன்றாமலிருப்பதற்காக இதுவரையில் போராட்டங்களை அழித்த நீண்ட அனுபவம் கொண்ட ஏகாதிபத்தியம் சார்ந்த பிழைப்புவாதிகள் தலைமையைக் கையகப்படுத்தியுள்ளனர்.
இவர்கள் இதுவரை நடந்த போராட்டம் தவறுகள் அற்றது என்றும், சரியான திசைவழியிலேயே சென்ற பலமான போராட்டம் என்றும் கூறிவருகின்றனர். அவ்வாறான போராட்டமே அழிக்கப்பட்டதால் இனிமேல் போராட்டம் சாத்தியமற்றது எனவும், ஆகவே ஏகாதிபத்தியங்களிடம் மண்டியிட்டு உரிமைகளை விற்று கிடைப்பதைப் பெற்றுக்கொள்வோம் என்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஈழப் போராட்டம் என்பதை தமது பிழைப்பிற்கான உக்தியாகப் பயன்படுத்திவரும் இந்த ஏகாதிபத்திய உளவாளிகளின் எமாற்று வித்தைகளால் போராட்டம் மிக நீண்டகாலத்திற்குப் பிந்தள்ளப்பட்டுள்ளது.
அயர்லாந்தைப் போன்ற இராணுவ வன்முறையாகப் போராட்டத்தை ஆரம்பிக்காமல் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு புதிய போராட்ட உக்திகளையும் புதிய மக்கள் சார்ந்த அரசியலையும் உருவாக்கும் முன்னணி சக்திகள் இலங்கையில் ஒடுக்கபடும் தேசிய இன்ங்கள் மத்தியிலிருந்து உருவாவது தவிர்க்கமுடியாத நிபந்தனையாகிவிட்டது.