ஜெயலலிதா பதவியேற்றதும்தான் எத்தனை எத்தனை நலத் திட்டங்கள்…! சமச்சீர் கல்வியை ஒழிக்க சில நூறு கோடி செலவு செய்து வீம்பாட்டம் ஆடிய கொடுமை; பல நூறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் இழுத்து மூடப்பட்டு, முகமது பின் துக்ளக்கே வெட்கப்படும் அளவுக்கு சிறப்பு மருத்துவமனை என்ற அறிவிப்பு; அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் குழந்தைகள் மருத்துவமனையாக்கப்படுமென்ற ஹிட்லர் பாணி உத்திரவு; ஆயிரக்கணக்கான மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிய வக்கிர முடிவு; பரமக்குடியில் போலீசு கயவாளிகளுக்கு வானளாவிய அதிகாரம் வழங்கி ஏழு தலித்துக்களை கொன்று குவித்த பிசாசு ஆட்சி; மாதம் இரண்டு லாக்கப் கொலைகளைச் செய்யும் போலீசுத் துறைக்கு அளவிலா சலுகைகள்.
ஆனாலும் ஜெயலலிதா விடுவதாக இல்லை. முந்தைய முறை தன்னை முதலமைச்சராக தெரிவு செய்யாத மக்களை இந்த முறை வேறு வழியின்றி தெரிவு செய்திருந்தாலும் பழிவாங்க நினைக்கிறார் போலும்.
பால், மின்சாரம், பேருந்து என்று அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் ஒரு மூச்சிலேயே விலையையும், கட்டணத்தையும் உயர்த்தி தான் ஒரு பாசிஸ்ட் என்று ஓங்கி நிரூபித்திருக்கிறார். இந்தியாவில் எந்த ஒரு முதலமைச்சரும், மாநிலமும் செய்திராத முன்னுதாரணமிது.
சுருங்கக் கூறின் இந்த விலை உயர்வினால் ஆவின், அரசுப் போக்குவரத்து கழகங்கள், மின்சார வாரியம் ஆகியவை கடும் கடன் சுமையிலிருந்து விடுபடும் என்பதெல்லாம் சும்மா ஒப்புக்கு தெரிவிக்கப்படும் சாக்கு. உண்மையில் இவற்றை ஒழித்து தனியார் துறையை விரிவுபடுத்தி கொள்ளையடிப்பதற்குத்தான் இவை உதவப் போகின்றன.
ஆவின் பால் தரமானது, சீக்கிரம் கெட்டுப் போகாது, சத்து விவரம் அறிவிக்கப்பட்ட அளவிலேயே இருக்கும். தனியார் பால் இவைகளுக்கு நேரெதிரானது. பொது மக்கள் அனைவரும் ஆவின் பாலையே விரும்புகின்றனர் என்றாலும் கடந்த சில ஆண்டுகளாக தனியார் பால் முதலாளிகள் பெருகி வருவதற்கு அரசே மறைமுகமாக உதவி செய்கிறது. ஆவின் வலைப்பின்னலை கொஞ்சம் கொஞ்சமாக தனியார் முதலாளிகள் கைப்பற்றி வருகின்றனர். ஆவின் பால் கிடைக்காது என்ற தட்டுப்பாட்டை உருவாக்கி தனியார் பால் முதலாளிகள் சந்தையில் கணிசமான அளவை பிடித்திருக்கின்றனர்.
தனியார் பால் முதலாளிகள் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் பினாமிகளாகக் கொண்டும், இல்லையேல் லஞ்சத்தால் குளிப்பாட்டியும் இதைச் செய்து வருகிறார்கள். ஆவினுக்கு பால் கொடுக்கும் விவசாயிகளையும் தனியார் பால் முதலாளிகள் வேண்டுமென்றே அதிக விலை கொடுத்து கைப்பற்றுவதும் நடக்கிறது. ஆவின் ஒட்டு மொத்தமாக இழுத்து மூடப்பட்டாலோ, இல்லை கணிசமான சந்தையை இழந்தாலோ கொள்முதல் விலை என்பது தனியார் முதலாளிகள் நிர்ணயிக்கும் ஒன்றாகத்தான் இருக்கும். மேலும் சிறு அளவில் கால்நடை வைத்து பராமரிக்கும் விவசாயிகளை ஒழித்து விட்டு பணக்கார விவசாயிகள் பெரும் பண்ணைகளை வைத்து நடத்துவதையே தனியார் பால் நிறுவனங்கள் விரும்புகின்றன. இதன்மூலம் பல இலட்சம் சிறு விவசாயிகள் ஒழிக்கப்படுவார்கள். இது ஒரு தனிக் கதை.
இந்நிலையில் பால் விலை உயர்வு என்பது தனியார் முதலாளிகளை நோக்கி மக்கள் திரும்பவதையே நீண்ட கால நோக்கில் செய்யும். மேலும் ஆவின் முகவர்களுக்கும் குறைவான கழிவு வருமானம், பால் பொருட்கள் போதிய அளவில் தராமல் இருப்பது என்ற பிரச்சினையும் தமிழகம் முழுவதும் உண்டு. இறுதியில் ஆவின் பாலை வைத்து தனது குடும்ப பட்ஜெட்டை போடும் சாதாரண மக்கள் அனைவரும், இனி மாதம் 200 முதல் 400 ரூபாயை அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். இது பெரும்பாலான உழைக்கும் மக்களுக்கு பெரும் சுமை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அது போல பேருந்து கட்டண உயர்வு. தற்போதைய கட்டண உயர்வு மூலம் விரைவுப் பேருந்துகளின் கட்டணம் என்பது ஏறக்குறைய ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை நெருங்கி விட்டது. ஏற்கனவே அரசு பேருந்துகள் போதிய பராமரிப்பின்றி இயக்கப்பட்டு வந்தாலும் கட்டணம் குறைவு என்ற ஒரே காரணத்திற்காக மக்களால் விரும்பப்பட்டு வந்தன. இப்போது அதற்கும் ஆப்பு வைத்திருக்கிறார்கள். இலாபகரமான பேருந்துப் பாதைகள் முழுவதும் தனியாருக்கு திறந்து விடப்பட்டிருக்கும் நிலையில் இலாபம் இல்லாத பாதைகளுக்கு சேவை அளிப்பது அரசு பேருந்துகள் மட்டும்தான்.
ஆனால் இலாபம் தரும் பாதைகளை வைத்து தனியார் முதலாளிகள் சம்பாதிப்பதால் அந்த பணம் அரசுக்கு வருவதில்லை. ஆகையினால் மொத்தத்தில் நட்டம் ஏற்படுகிறது. மேலும் அரசு போக்குவரத்து கழகத்தை பொதுத்துறை அதிகாரவர்க்க முதலாளிகளும், அமைச்சர் பெருச்சாளிகளும் 90களில் செங்கோட்டையன் அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே கொள்ளையடித்து வருகின்றனர். பாடி கட்டுவது, உதிரிப் பாகங்கள் வாங்குவது, ஏன் பயணச்சீட்டு அடிப்பது வரை இந்தக் கொள்ளை விருட்சமாய் வேர் விட்டிருக்கிறது.
இது போக மினிபஸ், ஷேர் ஆட்டோ, கால்டாக்சி, கேப் முதலான தனியார் சேவைகள் மூலம் பொதுப்போக்குவரத்து சேவையிலிருந்து அரசு மெல்ல மெல்ல கழன்று கொண்டு வருகிறது. விரைவுப் பேருந்து மட்டுமல்ல, நகரப் பேருந்துகளின் கட்டண உயர்வும் சாதாரண மக்களை அச்சுறுத்தும் வண்ணம் இருக்கிறது. ஆவடி, பூந்தமல்லியிலிருந்து பாரிமுனைக்கும், பாரி முனையிலிருந்து தாம்பரத்திற்கும் வேலை நிமித்தமாக சென்று வரும் மக்கள் இனி கிட்டத்தட்ட 30 முதல் 40 சதவீதம் அதிகம் செலுத்த வேண்டியிருக்கும். தோராயமாக 500 முதல் 1000 ரூபாய் வரை அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும்.
5000, 10,000 ரூபாய் சம்பளத்தில் வாழும் மக்களின் மொத்த செலவு திட்டத்தில் போக்குவரத்து மட்டும் 20 சதவீதத்தை எடுத்துக் கொள்ளும். அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினால் அல்லறும் மக்களுக்கு இது பேரிடியாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை. மத்திய அரசு டீசல் விலையேற்றத்தினால் நட்டம் என்பதில் ஒரு உண்மையை மறைத்து வருகிறார்கள். மொத்த விலையில் பாதிக்கும் மேற்பட்ட தொகை வரியாகச் செல்கிறது. இது மாநிலங்களுக்குத்தான் செல்கிறது என்றாலும் அதை குறைக்க யாரும் தயாரில்லை.
மேலும் கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்பட்டு, விவசாயம் அழிக்கப்பட்டு வேறு வழியின்றி மக்கள் நகர்ப்புறங்களை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது. இந்த செயற்கையான நகரமயமாக்கத்தின் விளைவுதான் எல்லா இடங்களிலும், பேருந்துகளிலும், ரயில்களிலும் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கும் இந்த அரசுதான் காரணம். கிராமப்புறங்களையும், விவசாயத்தையும் வாழ வைத்திருந்தால் இந்த அசுர போக்குவரத்து இருக்க வேண்டிய அவசியமில்லை. இனி பேருந்து கட்டண உயர்வால் மக்கள் ரயில்களை மொய்க்கப் போவது உறுதி. ஏற்கனவே அப்படித்தான் நடந்து வருகிறது. ஆக ரயில்வே நிறுத்தங்களில் இனி வன்முறை, சண்டையில்லாமல் மக்களை திணிப்பதற்கு ஏகப்பட்ட போலீசு தேவைப்படும். அல்லது ரயில் கட்டணங்களையும் ஆம்னி பேருந்து அளவு உயர்த்தி விட்டால் பிரச்சினை இல்லை. அதையும் செய்தாலும் செய்வார்கள்.
அடுத்து மின்சார கட்டண உயர்வை அரசு அறிவிக்காது, ஒழுங்குமுறை ஆணையமே அறிவிக்கும் என்று தனக்கு சம்பந்தமில்லாதது போல ஜெயலலிதா தெரிவிக்கிறார். ஏற்கனவே கிராமங்களில் 5 மணி நேரத்திற்கும் அதிகமான மின்வெட்டு, நகரங்களில் 3 மணி நேரத்திற்கு குறையாத மின்வெட்டு, மின்சாரமில்லாமல் ஓட முடியாத விவசாயிகளின் பம்பு செட்டுக்கள், சிறு – நடுத்தர தொழில்கள் என்று ஏகப்பட்ட பிரச்சினை இருக்கும் போது பட்ட காலிலே படும் என்பது போல கட்டண உயர்வு. இந்தக் கட்டண உயர்வும் ஏறத்தாழ 30 முதல் 40 சதவீதம் இருக்குமென்று தெரிகிறது. அதன்படி 500 ரூபாய் கட்டியவர்கள் இனி 700 ரூபாய் கட்ட வேண்டும். 1000 ரூபாய் கட்டியவர்கள் இனி 1400 ரூபாய் கட்ட வேண்டும்.
பெரு நகர குடித்தன வீடுகளில் யூனிட் ஒன்றுக்கு 7, 8 ரூபாய் வைத்து வாடகைக்கு விடுபவர்கள் இனி பத்து ரூபாய் என்று மாற்றப் போவது உறுதி. அதன்படி 100 யூனிட் மட்டும் பயன்படுத்தும் மக்கள் அதற்கென ரூ.1000 கட்ட வேண்டும். இது வீடுகளில்லாமல் வாடகைக்கு இருக்கும் சாதாரண மக்களுக்கு எத்தகைய துயரமென்பது விளக்காமலேயே புரியும். சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தடையின்றி சலுகை விலையில் கொடுக்கப்படுவதும், ஷாப்பிங் மால்கள் முதலான பேரங்காடிகளுக்கு விரயமாக்கப்படும் மின்சாரமும்தான் இன்றைய தட்டுப்பாட்டிற்கு காரணம்.
இவர்களுக்கு உரிய விலை வைத்தாலே மின்சார வாரியம் நட்டமின்றி செயல்பட முடியும். இது போக ஆளும் கட்சி பொதுக்கூட்டங்களுக்கும், கோவில் விழாக்களுக்கும் கொக்கி போட்டு திருடப்படும் மின்சாரத்திற்கு உரிய கட்டணத்தை வசூலிக்க முடியும். இதையெல்லாம் விடுத்து சாதாரண மக்களது மடியில் கை வைக்கிறார் ஜெயலலிதா.
தமிழகத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை என்று நாடகமாடும் ஜெயலலிதாவின் நரித்தனத்திற்கு தினமலர், தினமணி, ஹிந்து, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஊடக மாமக்கள் விளம்பரம் கொடுத்து அது உண்மை போல செய்திகளை வெளியடுகின்றனர். இலவச லாப் டாப், மிக்சி, பேன், கிரைண்டர், ஆடு மாடு போன்றவை கொடுப்பதற்கு மத்திய அரசு நிதி கொடுக்க வேண்டுமாம்.
எனில் இதை தேர்தலின் போது தெரிவித்திருக்கலாமே? இத்தகைய இலவச திட்டங்களை மத்திய அரசு நிதி கொடுத்தால் மட்டும் அமல்படுத்துவோம் என்றல்லவா அறிவித்திருக்க வேண்டும்? தி.மு.கவிற்கு போட்டியாக ஏதாவது செய்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதுதான் பாசிச ஜெயாவின் திட்டம். உண்மையில் இத்தகைய இலவசத் திட்டங்களெல்லாம் கொடுக்க கூடாது என்பதுதான் அவரது உட்கிடை. முதலாளிகளின் உலகில் வாழும் அவருக்கு சாதாரண மக்களது நலனைப் பற்றி என்ன அக்கறை இருக்க முடியும்? உண்மையில் மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என்றால் தன்னால் எதுவும் பிடுங்க முடியாது என்று ஆட்சியை தூக்கி எறிந்து விட்டு போகவேண்டியதுதானே?
நட்டமடையும் பொதுத்துறைகளுக்காக கட்டண உயர்வை அறிவித்திருப்பதாக கூறும் ஜெயா அது போல ஆண்டுக்கு 17,000 கோடி ரூபாய் வருமானத்தை அள்ளித் தரும் மற்றொரு ‘பொதுத்துறையான’ டாஸ்மாக்கிற்கு கட்டண குறைப்பை அறிவிப்பாரா? இல்லை அந்த வருமானத்தைக் கொண்டு பால், பேருந்து விலை உயர்வை செய்யமாட்டோம் என்றுதான் சொல்லுவாரா? முக்கியமாக அவரது பல இலவசத் திட்டங்களுக்கு அமுத சுரபி இந்த டாஸ்மாக்தான். அதனால்தான் ஏழை குடிகாரர்களின் வாந்திகளுக்கிடையே குடிக்க விரும்பாத பணக்காரர்களுக்காக எலைட் டாஸ்மாக்கை திறக்கப் போகிறார்.
அரசு வரிவருவாயைப் பெருக்க வேண்டுமானால் கார்களை வைத்திருப்போருக்கு வரி உயர்த்த வேண்டும், மாளிகைகளில் குடியிருப்போருக்கு வரி விதிக்க வேண்டும், பன்னாட்டு முதலாளிகள், தரகு முதலாளிகள் இவர்களுக்களல்லவா அதிகம் வரி விதிக்க வேண்டும்? இத்தகைய வசதிகளெதுவும் இல்லாத வாழ்வை நடத்துவதற்கே அல்லும் பகலும் போராடிக் கொண்டிருக்கும் மக்களின் மடியில் கை வைக்க வேண்டுமென்றால் என்ன காரணம்?
கல்வி, போக்குவரத்து, மருத்தவம் என அனைத்து துறைகளிலும் அரசை ஒழித்து விட்டால் அளப்பறிய பணம் தனியார் முதலாளிகளுக்கு போகும். அதற்காகத்தான் இந்த விலை உயர்வு. இது பாசிச ஜெயா மட்டுமல்ல, கருணாநிதி இருந்தாலும் இப்படித்தான் நடந்திருக்கும். என்ன தி.மு.க ஆட்சியிலிருந்தால் அது சத்தமில்லாமல் நடந்திருக்கும். பாசிச ஜெயா என்பதால் ஊரறிய பறையடித்து அறிவித்திருக்கிறார்.
கூட்டிக்கழித்துப் பார்த்தால் இனி உழைக்கும் மக்கள் தமது மாத செலவில் 2000 ரூபாய் வரை அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். இந்த சுமையை அவர்கள் அடிமைகளைப் போல சுமந்து கழிக்கப் போகிறார்களா? இல்லை தளையை அறுத்து போராடப் போகிறார்களா?
ஓட்டுப் போடாதீர்கள், அதில் தீர்வில்லை, இந்த சமூக அமைப்பை மாற்ற புரட்சி நடத்த வேண்டுமென்று பேசினால் இதெல்லாம் வேலைக்காகாது என்று எல்லாம் அறிந்தவர் போல புறந்தள்ளும் நடுத்தர வர்க்கம் இனியாவது தனது முட்டாள்தனத்தை உணருமா?
பாசிச ஜெயா அறிவித்திருக்கும் இந்த உத்திரவுகள் ஒரு முன்னோட்டம்தான். நாடும், மக்களும் மொத்தமாக பன்னாட்டு முதலாளிகளுக்கு விலை பேசப்படும் அங்கமாகத்தான் இந்த அறிவிப்புகள் பட்டவர்த்தனமாக வருகின்றன. என்ன செய்யப் போகிறோம்?
நன்றி : வினவு
Let the politicians stop freebies. Before getting these things free did the people die? when such free things are supplied not only money is wasted but also give room for much corruption 90% of freebies go to rich people only. It is a trick to get vote and come to power.. Who started such things.? If this is done there is much scope to recover . we people now feel why should we have elections.