22.09.2008.
மாஸ்கோ:
காகசஸ் பகுதியில் நடந்த நிகழ்ச்சிகள் விரிந்த ஐரோப்பிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் தேவையை வலியுறுத்தியுள்ளன என்று ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ் கூறினார்.
ரஷ்யாவில் உள்ள பொது அமைப்புகளின் தலைவர்களின் கூட்டம் மாஸ்கோவில் கிரம்ளினில் நடைபெற்றது. அப்போது அவர் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.
உலகப் பாதுகாப்பு அமைப்பு தோற்று விட்டது என்பதை தெற்கு ஒசெட்டியா மீது ஜார்ஜியாவின் படையெடுப்பு நிரூபித்து விட்டது என்று அவர் கூறினார்.
நேட்டோ எந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டது? எவ்வகையான பாதுகாப்பை அது உறுதிப்படுத்தியது.
அதனால் இயன்றதெல்லாம் ஜார்ஜியா பிரச்சனை உருவாக்கம் மட்டுமே என்று அவர் சுட்டிக் காட்டினார்.
சிக்கலான சூழல்களில் தீர்வுகளைக் காண்பதற்குரிய கூட்டு நடவடிக்கைகளை உருவாக்க ஜப்பானில் நடந்த ஜி -8 மாநாட்டில் மேலை நாடுகள் தவறி விட்டன. அக்கூட்டு நடவடிக்கைகள் அமெரிக்க பங்கு மற்றும் நிதிச்சந்தைகளில் தேக்க நிலை உருவாக்கிய விளைவுகளைத் தவிர்த்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
ரஷ்யாவின் தேசியப் பாதுகாப்பு, ராணுவ நவீனமமயம் மற்றும் பாதுகாப்பு வலிமை வலுவூட்டப்படும். வருமாண்டில் ரஷ்யாவின் பாதுகாப்பு செலவீனத்தை 25 சதவீதம் உயர்த்த அதாவது 4,000 கோடி டாலர்களில் இருந்து 5,000 கோடி டாலர்களாக உயர்த்த ரஷ்ய நாடாளுமன்றம் சம்மதித்துள்ளது.