2009ம் வருடம் முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரான கடந்த ஐந்து வருட காலப்பகுதியில், சிறீலங்கா விமானப்படையினர் நல்லூர் கந்தன் ஆலய இரதோற்சவப்பெருவிழாவில் உலங்குவானூர்திகள் மூலம் கோபுர கலசத்துக்கும், இரதத்துக்கும் மலர்தூவி வந்தனர்.
இரதத்தில் எழுந்தருளி கந்தன் உலாவரும் காட்சியில் பக்தர்கள் இலயித்து, இறை சிந்தனையில் இரண்டறக்கலக்கும் வேளையில், பலாலி விமான படைத்தளத்திலிருந்து எழுந்து, தலைக்கு மேலே வந்து தாழப்பறந்து, வானை அதிர வைத்துப்போகும் சிறீலங்கா விமானப்படையினரின் உலங்குவானூர்திகளின் இரைச்சல் மற்றும் உருப்படியினைக்கண்டு, பக்தி போய் பக்தர்களுக்கு பயம் பற்றிக்கொள்ளும்.
உலங்குவானூர்திகளை கண்டதும் சிறுவர்கள் இளையோர்கள் பெரியோர்கள் வேறுபாடின்றி அனைவருக்கும் போர்க்கால நினைவுகள் நிழலாடத்தொடங்கி விடுவதும்,
பிள்ளைகள் தம் பெற்றோரிடம், “அம்மா! இது தானே எங்கட அண்ணாவை குண்டு போட்டுக்கொன்றது. அப்பா! இதுதானே எங்கட அக்காவை குண்டு வீசிக்கொன்றது.” என்று கேட்டுக்கலங்குவதும்,
“சித்தி! இதின்ட குண்டு வீச்சிலத்தானே எங்கட அப்பாவும் தங்கச்சியும் வயிறு கிழிஞ்சி செத்தவையினம். மாமா! இது போட்ட குண்டுலத்தானே எங்கட அம்மாவும், தம்பியவையும், அம்மம்மாவும் கை கால் வேறவையாவும், உடம்பு வேறவையாயும் சிதறிக்கிடந்தவையினம்” என்று சொல்லி அழுது துடிப்பதுவும்,
ஜீரணிக்க முடியாத தாங்கொனா துன்பியல் நிகழ்ச்சியாகவே இருந்து வந்தது.
கந்தனுக்கும் விடுதலை… கலக்கத்துக்கும் விடுதலை…
கடந்த வருடங்களைப்போலல்லாது இம்முறை, இரதோற்சவப்பெருவிழாவில் கோபுர கலசத்துக்கும், இரதத்துக்கும் உலங்குவானூர்திகள் மூலம் மலர்தூவ, நல்லூர் கந்தன் தேவஸ்தானசபையால் விமானப்படையினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நல்லூர் தேவஸ்தானசபையினரின் இந்த தடை உத்தரவு பிறப்பிப்பு, இரத்தம் தசை, பிணம் மரணம், ஓலம் என்று கடந்த கால போர்ச்சூழல் அவலக்காட்சிகள் நினைவில் வந்து, முட்டி மோதி உயிர்வலியைக்கூட்டாமல், பக்தி பரவசத்தில் மனம் ஒப்பி போவதற்கு இம்முறை பக்தர்களுக்கு பெரும் பேறளித்துள்ளதுடன், இரத்தக்கறை தோய்ந்த கைகளால் ஆலயத்தின் புனிதத்தன்மை கெட்டுப்போவதையும் தடுத்து நிறுத்தியுள்ளது.
நல்லூர் ஆலயச்சூழலிலிருந்து கவரிமான்