நாட்டில் பெண்கள் யுவதிகள், மாணவிகள் சிறுமிகள் என்போர் மீதான பாலியல் வக்கிர செயற்பாடுகளும் சித்திரவதைகளும் வன்புணர்வுக் கொலைகளும் ஏனைய ஒடுக்குமுறைகளும் சமூகக் கொடுமைகளாகத் தொடர்கின்றன. இவற்றில் ஒன்றாக அண்மைய கொடூரச் சம்பவமாக வடபுலத்தின் புங்குடுதீவு வித்தியாலய மாணவி சி.வித்தியா (18) மீதான வன்புணர்வுப்படுகொலை இடம் பெற்றிருக்கின்றது.
இவ் ஈனச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் கண்டணங்களும் எதிர்ப்புகளும் கவனயீர்ப்புப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் மக்களால் வெளிக்காட்டப்படுவரும் கோபமும் எதிர்ப்பும் நியாயமானவையாகும்.
அதேவேளை சமூகச் சிதைவுகளுக்கும் சீரழிவுகளுக்கும் பாலியல் வக்கிரங்களுக்கும் காரணமாக அமைந்துள்ளவற்றைக் அடையாளம் கண்டறியவும் அவற்றிலிருந்து பெண்களையும் இளந்தலைமுறையினரையும் பாதுகாப்பாதற்கான ஒரு பரந்த திட்டம் வகுக்கப்பட வேண்டும். அதற்குச் சகல அரசியல் கட்சிகளும் சிவில் சமூக பொது அமைப்புகளும் சமூக அக்கறையுள்ள அனைவரும் ஒன்று கூடிச் செயலாற்ற முன்வரல் வேண்டும். குறிப்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் தத்தமது அரசியல் நிலைப்பாடுகள் நோக்கங்களுக்கு அப்பால் சமூக அக்கறைசார்ந்த பொதுவெளியில் ஒன்றினைந்து சமூக கலாச்சார விழிப்புணர்வுக்கான பொதுத்திட்டத்தை வரைந்து முன்னெடுக்கத் தமது பங்களிப்ப வழங்க முன்வரல் வேண்டும் என்னும் அழைப்பை எமது புதிய–ஜனநாயக மாச்சிச-லெனினிச கட்சி விடுக்கின்றது.
இவ்வாறு புதிய-ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அவ் அறிக்கையில், போரின் விளைவான இழப்புகளும் அழிவுகளும் ஒரு புறத்தில் மக்களை வாட்டி வதைத்து நிற்கின்றன. மறுபுறத்தில் வன்முறைச் சிந்தனைகளும் பழிவாங்கும் மனேபாவமும் பாலியல் வக்கிரப் போக்குகளும் சமூகக் கலாச்சார சீரழிவுகளாக் காணப்படுகின்றன. குறிப்பாக இளந்தலைமுறையினர் திறந்த துகர்வுக் ககலாச்சாரத் திணிப்புகளுக்கு ஆளாகி சமூக நோக்கும் அக்கறையும் இன்றி சமூகச் சிதைவுகளுக்கு உள்ளகி வருகின்ற சூழலே இருந்து வருகிறது. மதுக்கடைகளின் பெருக்கமும் போதைவஸ்துப் பாவனையின் திட்டமிட்ட திணிப்பும் வணிக சினிமாவின் சீரழிந்த ஊடுருவல்களும் நவீன தொழில்நுட்பத்தின் பாதக விளைவுகளும் சமூகத்தை நச்சுப்படுத்தி மனித விழுமியங்களைச் சாகடித்து வருகின்றன.
இவற்றையிட்டு தமிழர்தரப்புக் கட்சிகளும் ஏனைய கட்சிகளும் கவனத்தில் கொள்ளாது தத்தமது அரசியல் இருப்புக்கான கோரிக்கைகளை மட்டும் உரத்துப்பேசிக் கொண்டிருப்பதால் சமூக கலாச்சாரச் சீரழிவுகளை தடுத்து நிறுத்திவிட முடியாது. எனவே சமூகச் சீரழிவுகளின் விளைவுகளுக்கு எதிராகப் போராடும் அதே வேளை அவற்றுக்கான காரணங்களைக் கண்டறிந்து திட்டமிட்டுச் அவற்றுக்கு எதிராகச் செயற்படுவதற்கு அனைத்து நேர்மையான மக்கள் சார்புச் கட்சிகளும் பொது அமைப்புகளும் முன்வரல் வேண்டும் என்பதையே எமது கட்சி வேண்டுகோளாக விடுக்கின்றது. என்றும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சி.கா. செந்திவேல்
பொதுச்செயலாளர்