முல்லைத்தீவு மாவட்டத்தில் ‘புனர்வாழ்வளிக்கப்பட்டு’ விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை குடும்பத்துடன் இராணுவ முகாமிற்கு வருமாறு இராணுவத்தினர் கட்டாய அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.
மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி உள்ளிட்ட பிரதேசங்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை மாலை சென்ற இராணுவத்தினர் அங்கு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளைச் சந்தித்திருந்தனர்.
இதன் போது விடுவிக்கப்பட்ட போராளிகள் அனைவரும் தத்தமது குடும்பங்களுடன் பதவியா ஜானகபுர இராணுவ முகாமுக்கு கட்டாயம் வர வேண்டுமென மிரட்டும் வகையில் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இராணுவத்தினரின் ஏற்பாட்டில் குறித்த பிரதேசங்களுக்கு இன்று காலை பஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டு முன்னாள் போராளிகளும் அவர்களுடைய குடும்பத்தினரும் இராணுவ முகாமுக்கு ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.
இலங்கை அரசு இலங்கை முழுவதும் சமூகப் பொருளாதார அரசியல் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகிறது. இந்த நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு சமூகத்தில் அனாதரவாக விடப்பட்டுள்ள முன்னை நாள் போராளிகளைப் பயன்படுத்தி வருகிறது. சமூகத்தில் சாதாரண மனிதர்களாக வாழ்வதற்குரிய அத்தனை வாய்ப்புக்களையும் இலங்கை அரச பாசிஸ்டுக்கள் பறித்துள்ளனர். முன்னை நாள் போராளிகளுடன் பேசுவதற்குக் கூட அயலவர்கள் அச்சமடையும் நிலை திட்டமிட்டு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
போர்க்குற்றங்களுக்கான அமெரிக்க அரசின் தூதுவர் ஸ்ரிபன் ராப் இலங்கை அரசு முன்னை நாள் போராளிகளைத் தண்டிக்காமல் புனர்வாழ்வு கொடுத்து விடுதலை செய்தது தவறு என்று ஆலோசனை வழங்கியிருந்தார். கடந்த வாரம் அமெரிக்க அரசின் ஆசியப் பிராந்தியத்திற்கான செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் இலங்கை அரசு பயங்கரவாதத்தை அழித்தமைக்காகப் பாராட்டுத் தெரிவித்தார். இலங்கை அரச இராணுவத்தை ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு முன்னணிப்படையாகப் பயன்படுத்த ரோபேர் ஓ பிளேக் இனக்கொலையாளி கோத்தாபயவுடன் பேச்சு நடத்தினார். இவ்வாறான மேற்கு அரசுகளின் அழிப்பிற்குத் துணைபோன புலம்பெயர் அமைப்புக்கள் இன்று வேறு வழிகள் இன்றி மௌனமாகியுள்ளன.
மரணித்தவர்களை வைத்து நடத்தும் வியாபாரத்தை மட்டுமே தமது ஒரே வியாபாரமாக நடத்திவரும் இந்த அமைப்புக்கள் நேரடியாகவும் மறை முகமாகவும் இலங்கை அரசிற்குத் துணை போயுள்ளன. விட்டில் பூச்சிகளாக அழித்துச் சிதைக்கப்படும் முன்னை நாள்போராளிகளைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய திட்டங்களை முன்வைப்பதற்கு யாரும் தயாரில்லாத நிலையில் இலங்கை அரச பாசிஸ்டுக்களின் இனவாதப் பசியின் பலியாடுகளாக இவர்கள் பயன்படுவது தவிர்க்கமுடியாதது.