27.01.2009.
விடுதலைப் புலிகளுக்கு இந்தியா அனுதாபம் காட்டாது எனத் தெரிவித்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி, மோதல்களில் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
“நாங்கள் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுகின்றோம். எனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் எதிர்க்கின்றோம். எனவே, எந்தவொரு பயங்கரவாத அமைப்புக்கும் நாங்கள் அனுதாபம் காட்டமாட்டோம். குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பு” என பிரணாப் முஹர்ஜி இந்தியாவில் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
எனினும், அபாயத்திலிருக்கும் மக்கள் குறித்து இந்தியா அக்கறை செலுத்தியிருப்பதுடன், மோதல் சூழ்நிலையால் உதவியழந்திருக்கும் மக்களை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை நாங்கள் ஆராயவுள்ளோம் என்றார் அவர்.
இந்த விடயம் தொடர்பாகவே தனது இலங்கை விஜயத்தின் அந்நாட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம உள்ளிட்ட அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடவிருப்பதாக முஹர்ஜி, ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
இலங்கையின் பிந்திய நிலைவரங்கள் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் தான் பல்வேறு தடவைகள் தொலைபேசியில் கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.
“கொழும்பு சென்று இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்து எம்மால் என்ன செய்ய முடியும் என்பதை அறிந்துகொள்ளவுள்ளேன்” என இலங்கைக்கு இன்று விஜயம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.