ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணி (நுஆ), தமீழிழ விடுதலை புலிகளினால் ஸ்தாபிக்கப்பட்ட விடுதலை புலிகள் மக்கள் முன்னணி மற்றும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல.எவ்) ஆகிய கட்சிகளின் பதிவுகளை தேர்தல் திணைக்களம் இன்று புதன்கிழமை இரத்து செய்துள்ளது.
பதிவினை பாதுகாப்பதற்காக வருடாந்தம் பேணப்பட வேண்டிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாமையினாலேயே தேர்தல் ஆணையாளர் குறித்த கட்சிகளின் பதிவினை நிராகரித்துள்ளார்.
புதிய சட்டத்திற்கிணங்க அனைத்து அரசியல் கட்சிகளும் வருடாந்த கணக்கறிக்கையினை தேர்தல் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலை புலிகள் மக்கள் முன்னணி 1989ஆம் ஆண்டு விடுதலை புலிகளின் அரசியல் பிரிவாக உருவாக்கப்பட்டது. விடுதலை புலிகளின் பிரதி தலைவரான மாத்தையா என்றழைக்கப்படும் கோபாலசுவாமி மகேந்திரராஜா இக்கட்சியின் தலைவராகவும் யோகரட்னம் யோகி பொதுச் செயலாளராகவும் செயற்பட்டனர். இக்கட்சியின் சின்னமாக புலி காணப்பட்டது.