இலங்கை பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
இலங்கையில் நிரந்தரமாக அமைதி ஏற்பட வேண்டும். இதற்காக அங்கு போர் நிறுத்தம் செய்யவேண்டும். பேச்சு வார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண்பதே இந்த பிரச்சனைக்கு தீர்வாகும். விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பேச்சு வார்த்தைக்கு முன்வர வேண்டும்.
உலகளவில் பொருளாதார பாதிப்பு இருந்தாலும் இந்திய பொருளாதாரம் வலுவாகவே உள்ளது. உள்நாட்டு மொத்தஉற்பத்தி 7.1 சதவீதமாக உள்ளது. பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
உலகளவில் வங்கிகளுக்கு பொருளாதார அச்சுறுத்தல் உள்ளன. எனினும், இந்திய வங்கிகளுக்கு அச்சுறுத்தல் எதுவுமில்லை.
கடந்த 34 ஆண்டுகளாக அணுசக்தி திட்டத்தில் இந்தியா தனிமைப்பட்டிருந்தது. ஆனால், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் மூலம் இந்த பிரச்சினைக்கும் தீர்வு ஏற்பட்டுள்ளது.
அரசின் சிறந்த பொருளாதார கொள்கைகள் காரணமாக, மற்ற நாடுகளை போல நமக்கு பொருளாதார பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
நாடு முழுவதும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ரூ.3 கோடியே 4 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்திய எண்ணை எரிவாயு கழகம் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 112 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தகவல் தொடர்பு வளர்ச்சி சிறப்பாக உள்ளது. இந்தியாவில் 3ல் ஒருவரிடம் மொபைல் போன் உள்ளது. அடுத்த ஆண்டில் தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கையை 50 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் உற்பத்தி பொருட்களுக்கு ஆதார விலை உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் விவசாயிகளின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.