17.10.2008.
தமிழ்நாட்டில் இடம்பெறும்ஆர்ப்பாட்டங்களுக்காக விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை ஒருபோதும் இடை நிறுத்தப்படாதென உறுதியாக அறிவித்திருக்கும் அரசாங்கம், இலங்கையின் உள்விவகாரத்தில் இந்தியா ஒரு போதும் தலையிடாதெனவும் புதுடில்லி கொழும்புடன் அதிகளவுக்கு புரிந்துணர்வுடன் நடந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தேர்தலொன்று நடை பெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் எழுந்திருக்கும் இந்த சூடான நிலைமை, தேர்தல் முடிவடைந்த பின்னர் தணிந்து விடுமென்றும் அரசாங்கம் தெரிவிக்கிறது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக வியலாளர் மாநாட்டில் ஊடக அமைச்சரான லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தன மேற்கண்ட கருத்துகளை வெளியிட்டார்.
அத்துடன், இலங்கையில் நடைபெறும் யுத்தத்தை இந்தியா தலையிட்டு நிறுத்த வேண்டுமென இந்திய மத்திய அரசாங்கத்துக்கு 2 வார காலக்கெடு விடுத்திருப்பதையடுத்து, எழுந்துள்ள நிலைமைகள் குறித்து பேசவென அடுத்த ஓரிரு நாட்களில் அரசாங்கத்திலுள்ள தமிழ் அமைச்சர்கள் இந்தியா செல்லவிருப்பதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தன இதன் போது குறிப்பிட்டார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்;
“தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைமைகள் தொடர்பாக பல அர்த்தங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் நாம் இந்திய மத்திய அரசாங்கத்துடன் மிகவும் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருகிறோம். இலங்கையும் இந்தியாவும் மிகவும் அனுபவம் வாய்ந்த நாடுகள். 1987 ஆம் ஆண்டு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை வந்த இந்திய சமாதான படையினரை மீண்டும் திருப்பி அனுப்ப சிலர் எடுத்த முயற்சிகளின் பிரதிபலனும் எமக்குத் தெரியும்.
அத்துடன், இந்தியாவுக்கு அதன் தலைவரொருவரை இழக்க நேர்ந்தமையும் அவர்களுக்கு புரியும். எனவே பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இரு நாடுகளும் உடன்பாட்டுடனேயே செயற்படுகின்றன. அத்துடன், பிராந்தியத்துக்கே அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்ட சார்க் உச்சி மாநாட்டிலும் பொதுவான இணக்கம் காணப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் தற்போது எழுந்திருக்கும் நிலைமையானது, அங்கு தேர்தலொன்று வரும் போது பொதுவாகவே ஏற்படும் நிலைவரம் தான். இதிலும் வெவ்வேறு நிலைப்பாடுகள் இருக்கின்றன. ஜெயலலிதா, வைகோ போன்றவர்கள் பிறிதொரு நிலைப்பாட்டுடன் செயற்படுகின்றனர்.
இந்திய அரசாங்கத்துக்கு பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் பிரச்சினை இல்லை. வடக்கிலுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்கள் அனுப்ப வேண்டுமென்பதே அவர்களின் பிரச்சினை. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்திருக்கிறது. இது அரச சார்பற்ற நிறுவனங்களிடம் கேட்டுப் பார்த்தால் தெரியும். வன்னியில் மக்களுக்கு போதியளவு உணவுப் பொருட்கள் இல்லையென சம்பந்தப்பட்ட ஏதாவதொரு அரச சார்பற்ற நிறுவனம் தெரிவிக்குமென்றாலும் அதன் பொறுப்பை ஏற்றுக் கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கிறது.
எனவே, இந்தியாவில் ஏற்படும் அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக அரசாங்கம் என்ற வகையில் நாம் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருகிறோம். தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் புயலுக்கு நாம் இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேசி செயற்பட்டு வருகிறோம்.
இதேநேரம், யுத்தத்தின் மூலம் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வொன்று இல்லையென இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவிக்கவில்லை. கூடிய விரைவில் அரசியல் தீர்வொன்றை கொண்டு வருமாறே அவர் கூறியிருக்கிறார். அதேபோல், இலங்கை அரசாங்கமும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு மூலம் அரசியல் தீர்வொன்றுக்காக செயற்பட்டும் வருகிறது.
இந்தியப் பிரதமர் கூறியது போல நாமும் அரசியல் தீர்வுக்கு தயாராகவே இருக்கிறோம். கதவுகளும் திறந்தே இருக்கின்றன. எனினும், யுத்தமென்பதை குறுகிய காலத்தில் நடத்தி முடித்து விடலாம். ஆனால், பிளவுபட்ட கட்சிகளைக் கொண்டு அரசியல் தீர்வொன்றுக்காக அரசியல் செய்வதென்பது நீண்ட பயணமாகும்.
இதேநேரம், இந்தியாவில் தேர்தல் வரும் போது தமிழ்நாட்டில் இம் மாதிரியான நிலைமைகளை இதற்கு முன்னரும் பார்த்திருக்கிறோம். வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவே இவையனைத்தும் செய்யப்படுகின்றன.
இந்தியாவுக்கென்று தனித்துவமொன்றுள்ளது. அது போலவே எமக்கும் ஒரு தனித்துவம் இருக்கின்றதென்பதை இந்தியாவும் ஏற்றுக்கொண்டுள்ளது. அத்துடன், இலங்கை உள்விவகாரத்தில் இந்தியாவுக்கு தலையிட முடியாதென இந்திய காங்கிரஸ் பேச்சாளரும் கூறியிருக்கிறார். எனவே, எமது உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிடாது என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.
தற்போது தமிழ்நாட்டில் எழுந்திருப்பது அரசியல் பிரச்சினை. தமிழ்நாட்டினால் இந்திய மத்திய அரசாங்கத்துக்கும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதென்பது எமக்குத் தெரியும். இந்திய மத்திய அரசை ஸ்திரமற்றதாக்கும் செயற்பாடே இது. இது பேச்சுகள் மூலம் தீர்க்கப்படும்.
அத்துடன், தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழ்நாட்டின் தற்போதைய சூடான நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து விடலாம் என்றார்.