விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டரும், முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளருமான ஜோர்ஜ் ஆகிய இருவரும் இன்று இராணுவத்தினரிடம் சரணடைந்திருப்பதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
2002ம் ஆண்டு முதல் போர்நிறுத்த உடன்படிக்கை கடைப்பிடிக்கப்பட்டு வந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் ஊடகத் தொடர்பாளராக தயா மாஸ்டர் செயற்பட்டு வந்தார்.
தென்னிலங்கை மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் கிளிநொச்சி விஜயங்களின்போது அவர்களுக்கான பல ஒழுங்குகளையும் இவரே மேற்கொண்டு வந்தார்.
ஜோர்ஜ், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளராகச் செயற்பட்டு வந்தவராவர்.
கிளிநொச்சியில் நடைபெற்ற பல்வேறு ஊடகச் சந்திப்புக்களிலும் தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளராக இவரே செயற்பட்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுமாத்தளன் பகுதியில் சிவிலியன்களுடன் வந்த இவர்கள் இருவரும் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக இராணுவம் தெரிவிக்கின்றது.







