இலங்கையில் ஐ.நா. எதனை செய்தது, எதனை செய்யவில்லை என்பது தொடர்பான சந்தேகங்கள் அதிகரித்து உள்ளன. ஜூன் 3 இல் (நேற்று முன்தினம்) நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐ.நா.வின் ஊடகவியலாளர் மாநாட்டின் போது, ஆதாரபூர்வமான கேள்வி ஒன்றுக்கு ஐ.நா. பதிலளிக்கவில்லை என்று அங்குள்ள “இன்னர் சிற்றி பிரஸ்’ தெரிவித்திருக்கிறது.
இன்னர் சிற்றி பிரஸ்: மே 17 இல் விஜேய நம்பியார் தான் இரண்டு விடுதலைப்புலிகளுடன் கதைத்ததாக கூறியிருந்தமை குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அந்த இருவரும் சரணடைய முயற்சித்ததாகவும் அவர் இந்த இருவரிடமும் கே.பி. என்று அழைக்கப்படும் ஒரு நபரூடாக கதைத்ததாகவும் அரசாங்கத்திற்கு விடயங்களை தெரிவித்ததாகவும் பின்னர் அது தொடர்பாக கே.பி.யின் ஊடாக அவர்களுக்கு தெரியப்படுத்தியதாகவும் அதாவது, வெள்ளைக் கொடியுடன் வருமாறும் தெரியப்படுத்தியதாகவும் நம்பியாரை மேற்கோள்காட்டி ஊடக செய்திகள் வெளிவந்திருந்தன. பின்னர் அவர்கள் யாவரும் சுடப்பட்டனர். இந்த சரணடையும் விடயத்திற்கு சாட்சியமாக இருப்பதற்கு விஜே நம்பியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தன. வட இலங்கைக்குச் சென்று இந்த விடயத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளுமாறும், அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இந்த தொடர்பாடல்கள் குறித்து உங்களால் உறுதிப்படுத்த முடியுமா? இவற்றை ஐ.நா. மறுக்கிறதா அல்லது உறுதிப்படுத்துகின்றதா. ஆனால், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக ஐ.நா.வின் பங்களிப்பு என்ன?
பேச்சாளர் மிச்சேல் மொன்டாஸ்: நம்பியாரிடம் நான் இதனை கேட்டேன்.
9 மணித்தியாலங்கள் சென்ற பின்னும் பதில் வழங்கப்படவில்லை. ஊடகங்களின் ஒரு பகுதியிலிருந்து என்னைப் பற்றியும், எனது சகோதரனைப் பற்றியும் மறைமுகமான வழியில் விடயங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. இதனை உறுதிப்படுத்துவது தொடர்பாக நான் பரிசீலணை செய்யவில்லை. பதிலளிப்பது தொடர்பாகவும் நான் பரிசீலிக்கவில்லை என்று நம்பியார் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டிருந்தது. இலங்கையின் வரலாற்றை கவனத்திற்கெடுத்தால் பான் கீ மூன் முன்னாள் இந்திய இராஜதந்திரியான விஜே நம்பியாரை இலங்கைக்கு தமது தூதுவராக அனுப்பியிருக்க வேண்டுமா என்பது அடிப்படைக் கேள்வியாகும். பான் கீ மூனின் நெருங்கிய ஆலோசகர்கள் அவ்வாறு செய்திருக்கக்கூடாது என கருதியிருந்தார்கள் என்று “இன்னர் சிற்றி பிரஸ்’ குறிப்பிட்டுள்ளது.
ஜூன் 3 இல் “இன்னர் சிற்றி பிரஸ்’மற்றொரு கேள்வியையும் கேட்டிருந்தது.
இன்னர் சிற்றி பிரஸ்: ஐ.நா. மனிதாபிமான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் அறிக்கையில் இலங்கை தொடர்பாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மே 30 வெளியான அறிக்கையில், முகாம்களில் இருந்த இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தால் குறைந்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு தடவை எண்ணியதால் என்று ஒரு வரி கூறுகிறது. மே 27 ஆம் திகதி வெளியான அறிக்கையில், இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தால் கூடிக் காணப்பட்டது. முறைப்படி பதிவு செய்யும் விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படியானால், மக்கள் முகாம்களில் இருந்தே காணாமல் போய்விட்டார்களா என்பது குறித்து உறுதிப்படுத்திக்கொள்ள ஐ.நா. இதனைச் செய்கின்றது.
பேச்சாளர் மொன்டாஸ்: நல்லது. இது வழமைக்கு மாறான நிலைமை என்று நான் கூறவேண்டியுள்ளது. பெரும் எண்ணிக்கையான மக்கள் இடம்பெயர்ந்து வந்துள்ளனர். பதிவு செய்யும் நடவடிக்கைகள் இப்போதும் இடம்பெற்று வருகின்றன. சிலசமயம் இரண்டு தடவைகள் எண்ணப்பட்டிருக்கலாம். பின்னர் அவர்கள் அதனை சீர்படுத்தியிருக்கலாம். நாங்கள் அங்குள்ளோம். ஆனால், அவை எமது முகாம்கள் அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். இடம்பெயர்ந்தவர்கள் நன்கு நடத்தப்படுவதற்கு உதவியளிக்கவே நாங்கள் அங்கு சென்றுள்ளோம்.
இன்னர் சிற்றி பிரஸ்: முகாம்களிலிருந்து காணாமல் போன 13,130 பேரும் இருதடவையும் எண்ணப்பட்டவர்கள் என்று ஐ.நா. கூறுகின்றது. அப்படியானால் ஒருவரும் முகாம்களிலிருந்து கூட்டிச்செல்லப்படவில்லையா?
பேச்சாளர் மொன்டாஸ்: அதனை மனிதாபிமான ஒருங்கிணைப்பு அலுவலகம் கூறுகிறது. அதாவது, இரண்டு தடவைகள் எண்ணப்பட்டதாகக் கூறுகிறது. இது ஆட்கள் காணாமல் போன விடயமல்ல.