இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான நியமிக்கப்பட்டுள்ள, விசாரணைக் குழுவின் விபரங்களை, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, உத்தியோகபூர்வமாக இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளார்.விசாரணைக் குழுவின் விபரங்கள் அடங்கிய கடிதம் ஒன்று ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தினால், கடந்த வாரம், ஜெனிவாவில் உள்ள இலங்கை வதிவிடப் பிரதிநிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக் குழு தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாடு, நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 26வது அமர்வில், வெளியிடப்படவுள்ளது. ஜெனிவாவில் உள்ள இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாகக் கடந்த ஐந்து வருடங்களாகக் கண்துடைப்பு விசாரணைகளை ஐக்கிய நாடுகள் சபை நடத்திவருகிறது. இந்தக் கால எல்லைக்குள் இலங்கையில் இனச்சுத்திகரிப்புத் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன, இராணுவமயமாக்கல் தொடர்கிறது, சிங்கள பௌத்தமயமாக்கல் தொடர்கின்றது. வேதாந்தா, டாட்டா, ஆதித்யா பிர்லா போன்ற பல்தேசிய நிறுவனங்கள் சத்தமின்றி முழு இலங்கையையும் சூறையாடிச் செல்கின்றன. தமிழ்த் தலைமைகளோ ஜெயலலிதாவின் போலி அறிக்கைகளையும், ஐ.நாவின் வருடக் கணக்கில் நீண்டுசெல்லும் வெற்றுத் தீர்மானங்களையும் நம்பியிருக்கின்றன. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணையை முடித்து தண்டனை பெற்றுக்கொடுக்கும் வரை; சிங்கள பௌத்த குடியேற்றங்களை நிறுத்தவேண்டும், அகதிகளைத் திருப்பியனுப்பக்கூடாது, பல்தேசியக் கம்பனிகள் முதலீடுகளைத் திரும்பப்பெறவேண்டும், இராணுவத்தைத் திருமப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துப் போராங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். பல்வேறு அரசியல் தளத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய இப்போராட்டங்களை புலம்பெயர் அரசியல் தலைமைகள் முன்னெடுக்கத் தவறினால் புதிய போராட்டக் குழுக்களின் வரவு தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடும்.