விக்கினேஸ்வரன் ஒரு பிரிவினைவாத ஆயுத போராளி அல்ல என்பது இங்குள்ள சிலரின் இன்றைய கவலை
– சிங்கள வானொலி நிகழ்வில் மனோ கணேசன்
இந்த தீவில் தனியொரு தமிழ் நாட்டிற்காக ஆயுதம் தூக்கி போராடிய வரலாறு வடக்கு முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள விக்கினேஸ்வரனுக்கு கிடையாது. இந்த அடிப்படை உண்மை, ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட சில சிங்கள் தீவிரவாத குழுக்களுக்கு மனதுக்குள்ளே பெரும் மனக்கவலையை தந்துள்ளது. இனவாதிகளின் நாடிபிடித்து பார்க்கும் வல்லமை எனக்கு இருப்பதாக நான் நம்புவதால் இது எனக்கு புரிகிறது என வி எப்எம் தனியார் வானொலியில் ஒலிபரப்பாகும் “சித்தாமுல்ல” என்ற பிரபல சிங்கள நேரடி அரசியல் விவாத நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இன்று காலை நடைபெற்ற இந்நிகழ்வில் மனோ கணேசனுடன், ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரச்சார செயலாளர் நிஷாந்த வர்ணசிங்க கலந்துகொண்டார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
சம்பிக்க ரணவக்கவும், விமல் வீரவன்சவும் விக்கினேஸ்வரனுக்கு, பாலசிங்கம் என்ற பட்டத்தை சூட்டி மகிழ்கின்றார்கள். விக்கினேஸ்வரன் ஒரு பிரிவினைவாத பயங்கரவாதி என்றும், தமிழக கட்சிகளுடன் தொடர்பு கொண்டுள்ளார் என்றும், புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளினால் இயக்குவிக்கப்படுகின்றார் என்றும் இங்கு வந்து நண்பர் நிஷாந்த சொல்கிறார். இவர்களை எனக்கு புரிந்துகொள்ள முடிகின்றது. ஆனால் இவர்களது இந்த கவலையை என்னால் பகிர்ந்துகொள்ள முடியாது.
விக்கினேஸ்வரன், இலங்கையின் உயர்நீதிமன்ற கட்டமைப்பில் மிக உயர் பதவி வகித்தவர், தொழில்முறையில் நாடு முழுக்க வாழ்ந்து பணியாற்றியவர், கடைசியாக வெள்ளவத்தையில் வாழ்ந்தவர், நன்கு சிங்களம் பேசக்கூடியவர், சிங்கள இனத்துடன் தனிப்பட்ட உறவு தொடர்புகளை கொண்டவர் என்ற கண்ணுக்கு தெரியும் உண்மைகளை மறைத்துவிட்டு அவரை தமிழ் இனவாதியாக காட்டுவதற்கு, இந்த சிங்கள இனவாத கூட்டு மிகவும் கஷ்டப்படுகிறது.
ஏனென்றால் விக்கினேஸ்வரனும், சம்பந்தனும் தமிழ் இனவாதிகளாக இருந்தால்தான் சிங்கள மக்கள் மத்தியில் தங்கள் வண்டி ஓடும் என்பது இவர்களுக்கு நன்கு தெரியும். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், விக்கினேஸ்வரனுக்கும் வடக்கு தேர்தலின் போது முன்னின்று பிரச்சாரம் செய்த, காரணத்தால் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரான நானும் ஒரு தமிழ் இனவாதி என்று நண்பர் நிஷாந்த சொல்கிறார். இவருக்கு நான் இன்னொன்றையும் சொல்கிறேன். நான் வடக்கிற்கு சென்று பிரச்சாரம் மட்டும் செய்யவில்லை. வடக்கு முதல்வர் வேட்பாளர் நியமனத்தை விக்கினேஸ்வரன் ஏற்றுகொண்டதிலும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வெளியிலிருந்து நான் பங்களிப்பு வழங்கியிருந்தேன். எங்களுக்கு சரி என்று படுவதை நாம் எப்போதும் கொள்கைவழி நின்று செய்து வந்துள்ளோம்.
நண்பர் நிஷாந்த வர்ணசிங்கவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். பாருங்கள், இவர் சொல்வதை சிங்கள மக்களே இன்று ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இந்த நிகழ்வில் இன்று தொலைபேசியில் கேள்விகள் கேட்டு கருத்து தெரிவித்த ஒன்பது நேயர்களில் ஏழு பேர் சிங்களவர்கள். இவர்களில் ஒருவர் கூட என்னை திட்டவில்லையே. இரண்டு பேர் நிஷாந்தவை மிகவும் கடுமையாக திட்டி என்னை பாராட்டினார்கள். யுத்தம் முடிந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில், வடக்கில் தமிழர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்துகொண்டு பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்று அனைவரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்.
அதுமட்டும் அல்ல, அதிகம் வெளியில் வராத இன்னொரு உண்மை இருக்கின்றது. நடந்து முடிந்த மத்திய மாகாண, வட-மேற்கு மாகாண தேர்தல்களில் போட்டியிட்ட சம்பிக்க ரணவக்கவின் ஜாதிக ஹெல உறுமய, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, தினேஷ் குணவர்த்தனவின் மஹஜன எக்சத் பெரமுன ஆகிய கட்சிகளை சேர்ந்த ஒரு வேட்பாளர்கூட வெற்றிபெறவில்லை. அனைவரும் படுதோல்வி அடைந்து விட்டார்கள்.
சிங்கள இனத்தையும், சிங்கள நாட்டையும் காப்பாற்ற கிளம்பியுள்ளதாக சொல்லிக்கொள்ளும் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன ஆகிய சிங்கள தீவிரவாத அரசியல்வாதிகளின் வேட்பாளர்களை சிங்கள மக்கள் நிராகரித்துவிட்டார்கள். ஆகவே இந்த நாட்டில் இன்று இனவாதம் தோல்வியடைந்து வருகின்றது. உங்களது இனவாத கூட்டு கட்சிகளின் கருத்துகளும், பொதுபல சேனா போன்ற அமைப்புகளின் கூச்சல்களும் மக்களை சலிப்படைய வைத்துள்ளன.
கடந்த சில மாதங்களாக நான் அநேகமான சிங்கள ஊடக நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றேன். அனைத்து நிகழ்வுகளிலும் சிங்கள மக்கள் நான் சொல்லும் கருத்துகளை புரிந்து கொண்டு வருவது எனக்கு மிக தெளிவாக தெரிகிறது. எங்களது அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் மூலம் நான், விக்கரமபாகு, சிறிதுங்க, அசாத் சாலி, சுமந்திரன் ஆகியோர் உண்மைகளை சிங்கள மக்கள் மத்தியில் பேசி வருகிறோம். இது எங்கள் வெற்றி. நாங்கள் அரசாங்கத்துக்கு சாமரம் வீசி, சுயலாப வரப்பிரசாதங்களை வாங்கி கொண்டு காட்டிகொடுக்கும் அரசியல் செய்யாமல், உண்மைகளை மட்டும் துணிந்து பேசி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் மனங்களை வென்று வருகிறோம்.
விக்கரமபாகு, சிறிதுங்க, அசாத் சாலி மனோகணேசன் இவர்களில் எவராவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் எமது தமிழ் தேசிய கூட்டமைப்பு இவர்களுக்கு எதிராகப் போட்டியிடும் ராஜபக்ச- ரணில்- சரத் போன்றவர்களுக்கே தமது ஆதரவை அளிக்கும். தமிழ் பெருங்குடி மக்களும் பழக்கதோஷத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு காட்டும் வாக்காளருக்கே தமது வாக்குக்களை அளிப்பார்கள்
வாழ்க ஜனநாயகம்
சிங்களவர்கள் எல்லாரும் இனவாதிகள் அல்ல.
அஉண்மையான அரசியல் பிரச்சினைகளை அடிமட்ட சிங்களவர்களுக்கும் புரியவைக்க வேண்டும்..
இது சிங்களம் தெரிந்த தமிழ் அரசியல்வாதிகளதும்
சிங்களம் தெரிந்த தமிழ் எழுத்தளர்களதும் முக்கிய பணி..
அடிமட்ட சிங்கள மக்களுக்கு நாட்டில் என்ன பிரச்சினை உள்ளதென்றே தெரியாது.சிங்கள அரியல்வாதிகள் தமிழர்களை மட்டுமல்ல சிங்களவர்களையும் ஏமாற்றி நன்கு நன்கு அரசியல் செய்கிறார்கள்..
சிங்களவர்களை புரியவைக்கும் மனோ அண்ணனுக்கு நன்றி..